உடற்பயிற்சி பலன் தந்தது - மாரடைப்பில் இருந்து மீண்ட சுஷ்மிதா சென் கருத்து

“சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள்; ஜிம்முக்கு செல்லுங்கள்” என மாரடைப்பிலிருந்து மீண்டது குறித்து நடிகை சுஷ்மிதா சென் அனுபவம் பகிர்ந்துள்ளார்.

Update: 2023-03-06 05:29 GMT

தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுஷ்மிதா சென். முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்தார். இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 47 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு சுஷ்மிதா சென் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். தற்போது மாரடைப்பு அனுபவங்களை மீண்டும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து இதய அடைப்பை நீக்கி ஸ்டென்ட் வைத்துள்ளனர். மேலும் சில காலம் வாழ்வதற்காக திரும்பி வந்து இருக்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் நேரலையில் சுஷ்மிதா சென் பேசும்போது, "இளம் வயதினரையும் மாரடைப்பு விட்டுவைப்பதில்லை. எனவே, அனைவரும் அடிக்கடி இதய பரிசோதனை மேற்கொள்வது அவசியம். என்னுடைய ரத்தக்குழாயில் 95 சதவீத அடைப்பு இருந்தும் அதில் இருந்து மீண்டு இருக்கிறேன். தொடர்ந்து நான் சுறுசுறுப்பாக இயங்குவதுதான் அதற்கு காரணம்.

உங்களில் பலர் ஜிம்முக்கு போவதை நிறுத்தி இருக்கலாம். ஆனால் மாரடைப்பில் இருந்து மீள தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதுதான் எனக்கு பலன் அளித்து உள்ளது. மாரடைப்பு ஆண்களுக்கு மட்டும் வரும் என்று நினைக்க வேண்டாம். அது பெண்களையும் தாக்கும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்