25 ஆண்டுகள் கழித்து அமீர்கான் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்
நடிகர் அமீர்கான் நடிப்பில் ’சர்பரோஷ்’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்து விட்டது. அதன் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என அமீர்கான் கூறியுள்ளார்.;
ஜான் மேத்யூ மாத்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த 1999-ல் வெளியான திரைப்படம் 'சர்பரோஷ்'. படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக படத்திற்காக சிறப்பு பிரீமியர் நேற்று ஒளிபரப்பானது. இதில் கலந்து கொண்ட அமீர்கான் நிச்சயம் இந்தப் படத்தின் அடுத்த பாகம் வரும் என்பதை உறுதிப்படுத்தினார். இதில் இயக்குநர் ஜான் மேத்யூ மாத்தன் பணிபுரிய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அந்த நிகழ்வில் அமீர்கான் பேசியபோது, "இந்த முறை இன்னும் சீரியஸாக, சரியான ஸ்கிரிப்ட்டுடன் நாங்கள் வரவிருக்கிறோம். இதற்கு ஜான்தான் சரியான தேர்வாக இருப்பார். இதன் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்பதை நானும் பீல் செய்கிறேன்" என்றார். இந்தப் படத்தை இயக்குநர் ஜானுடன் சேர்ந்து அமீர்கானும் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத ஆயுத வர்த்தகம் ஆகியவற்றை மையப்பொருளாக இந்தப் படம் முன்வைத்தது. இந்தப் படம் குறித்து ஜான் பேட்டியில் பகிர்ந்து கொண்டபோது, முதலில் பலரும் இந்தக் கதைக்கு நடிகர் அமீர்கான் வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக ஷாருக்கானை நடிக்க வைத்தால் மட்டுமே படம் லாபம் தரும் என்று சொல்லியதாகச் சொன்னார். ஆனால், தான் இந்தக் கதைக்கு ஷாருக்கானை மனதில் நினைக்கவே இல்லை என்று சொல்லி, அமீர்கானை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ஜான்.