'வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்' - இமானுடன் கைகோர்த்த பார்த்திபன்...!

இயக்குனர் பார்த்திபன் இயக்கும் அடுத்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.;

Update:2023-10-24 15:50 IST

சென்னை,

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரேஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். படவேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை தனது அதிகாரபூர்வ 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் இயக்குனர் பார்த்திபன் அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் இமானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான் வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன். இம்மான் …. இமான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்த இசையமைப்பாளர் இமான், 'உங்கள் படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி..! உங்கள் இயக்கத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்தது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவம்..!" என்று பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இமானின் பதிவை பகிர்ந்துள்ள பார்த்திபன், ஏற்கனவே 5 பாடல்கள் தயாரான நிலையில் 6வது பாடல் எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர்களின் இந்த எக்ஸ் வலைதள பதிவுகளை ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்