கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர்!

இன்று (நவம்பர் 29-ந் தேதி) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்.

Update: 2022-11-29 06:56 GMT

தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர்.

நகைச்சுவையை திகட்டாத கருத்துகளால் வழங்கி, மக்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்க வைக்கவும் செய்தார்.

நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு, பிறர் மனதை புண்படுத்தாமல், சீர்திருத்த கருத்துகளை துணிச்சலோடு எடுத்துக்கூறிய அற்புத கலைஞர்.

அந்த காலத்தில் நடிகர்களை 'கூத்தாடிகள்' என்று அழைத்து கேலியும், கிண்டலும் செய்யும் நிலை இருந்தது. அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும், சமூக அந்தஸ்தும் கிடைக்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் முதல் காரணம். தன் இயல்பான நகைச்சுவையால் அந்த நிலையை மாற்றினார்.

என்.எஸ்.கே. என சுருக்கமாக அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் 29-11-1908-ல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தார். கிருஷ்ணன் தந்தை பெயர் சுடலையாண்டி பிள்ளை. தாயார் இசக்கியம்மாள்.

இளம் வயதிலேயே நாடக மேடை ஏறி நடிக்கத்தொடங்கினார். நாடகத்தில் முதன் முதலில் வில்லுப்பாட்டை புகுத்தியவர் இவரே!

காந்தி மகான் கதையில் மது அருந்தாத கொள்கையை பரப்பினார். கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கிருஷ்ணன் செய்த கதாகாலட்சேபம் பிரசித்தி பெற்றது.

1936-ம் ஆண்டில் 'சதிலீலாவதி' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தான் திரையுலக ஜாம்பவான் எம்.ஜி.ஆருக்கும் அறிமுக படமாக அமைந்தது.

தொடர்ந்து பைத்தியக்காரன், நல்லதம்பி, அமரகவி, பணம், முதல் தேதி, மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள், அம்பிகாபதி உள்ளிட்ட 150 படங்களில் நடித்தார். பணம், மணமகள், படங்களை இயக்கவும் செய்தார்.

இவரது படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதிகொள்வார். சொந்தக்குரலில் பாடவும் செய்தார். கலைவாணருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும் நடிகை மதுரத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார். நகைச்சுவைக்கு அகராதி படைத்த கிருஷ்ணன்-மதுரம் ஜோடி திரையுலகை திளைக்க செய்தது. பாடல்களிலிலும் நகைச்சுவையை புகுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைவாணர்.

'பணத்தை எங்கே தேடுவேன்', 'ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்', 'இருப்பத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்' ஆகியவை மாத சம்பளம் வாங்குபவர்களின் யதார்த்த வாழ்க்கையை விவரிக்கும் அற்புதமான பாடல் வரிகள்.

'விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி' பாடலில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை அன்றே கணித்து கூறினார்.

இவரது பாடல் காட்சியின்போது கரவொலி தியேட்டரை அதிர வைக்கும். ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்பார்கள்.சமுதாயத்துக்கான பல சீர்திருத்த கருத்துக்களை நகைச்சுவை மூலம் நாட்டு மக்களுக்கு கொடுத்தார்

அவற்றில் பலவற்றை சொல்லலாம். உதாரணத்துக்கு மணமகள் படத்தில் ஒரு காட்சி

டி.ஏ.மதுரம் படிப்பறிவு இல்லாதவர். அவர் பெயருக்கு ஒரு மணியார்டர் வருகிறது. மகன் அனுப்பி இருக்கிறார். 25 ரூபாய் தபால்காரரிடம் பெற்றுக்கொள்கிறார். பிறகு அவனிடம் 'இந்தாப்பா இதில் என்னமோ எழுதி இருக்கு என்னான்னு படிச்சு சொல்லு' என்கிறார். உடனே தபால்காரர் படிக்கிறார். 'அன்புள்ள அம்மா நீ அனுப்பிய பணத்தில் படித்து பாசாகி நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டேன். என் முதல் மாத சம்பள பணத்தில் உனக்கு 25 ரூபாய் அனுப்பி இருக்கிறேன். அத்துடன் என் அன்பு 'கிஸ்சை'யும் அனுப்பி இருக்கிறேன்.

உடனே மதுரம் கோபமாக 'ஏம்பா போஸ்ட்மேனிடம் 25 ரூபாய் கொடுத்தே சரி! ஏதோ 'கிஸ்'ன்னு ஒன்னு அனுப்பி இருக்கானுமாமே! அதையும் கொடுத்துட்டு போ' என்றவுடன் போஸ்ட்மேன் ஓட்டம் பிடிப்பார்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வரும் என்.எஸ்.கே, இதுக்கு தான் பெண்களுக்கு படிப்பறிவு வேணுங்கிறது என்பார்.

எனக்கு குதிரை வண்டிகாரர்களை ரொம்பவும் பிடிக்கும் அவங்கதான் 'முன்னுக்கு வா, முன்னுக்கு வா' என்று கூப்பிட்டுகிட்டே இருக்காங்க என்று புன்னகை ததும்ப கூறுவார். மதுவிலக்குக்காக அவர் எழுதிய பாடல்

'குடிச்சு பழகு' என்று தொடங்கி ஒரு அதிர்ச்சியை கொடுத்து விட்டு ....அதன் பின் "காலையில் பல்தேய்ச்சவுடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சு பழகனும்" என்று கூறி அட்டகாசமாக சிரித்து மக்களையும் சிரிக்க வைத்து விடுவார்.

காலங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் கலைவாணர் நீங்காத இடம்பிடிக்க காரணம் அவரது வள்ளல் குணம்.

இல்லை என்று வரும் ஆயிரக்கணக்கானோருக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கினார்

மரண தருவாயிலும் உதவி கேட்டவருக்கு தன்னிடம் இருந்த வெள்ளிக்கூஜாவை வழங்கினார்.

கொடைவள்ளல் என புகழப்பட்ட எம்.ஜி.ஆர். ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் எனக்கு வந்ததற்கு காரணம் அண்ணன் என்.எஸ்.கே.வுடன் பழகியது தான் என்று குறிப்பிட்டார்.

கலைவாணரின் கொடைத்திறனுக்கு சான்று பகரும் ஒரு நிகழ்வு

கலைவாணர் தன் வாழ்நாளின் இறுதி காலத்தில் உடல் நலமின்றி படுக்கையில் இருக்கும்போது அவரை பார்க்க எம்.ஜி.ஆர். வருகிறார். பேசி முடித்து விட்டு புறப்பட்டு செல்லும்போது, அவர் என்.எஸ்.கே.வுக்கு தெரியாமல் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கிளம்ப எத்தனிக்கிறார். இதை அறிந்து கொண்ட கலைவாணர், தம்பி! ராமச்சந்திரா வைக்கிறது...வைக்கிற... இப்படி ஆயிரமா வைச்சா எப்படி? 100 ரூபாயா சில்லரை மாத்தி வைச்சின்னா உதவி கேட்டு வருகிறவர்களுக்கு கொடுக்க வசதியா இருக்குமே! என்று கூறவும் எம்.ஜி.ஆர். கண்கலங்கி விட்டார்.

மகாத்மா காந்தி மீது அபரிதமான அன்பு கொண்ட கலைவாணர் காந்தி மறைவுக்கு பின் நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரம் செலவில் காந்தி நினைவு ஸ்தூபியை தன் சொந்த செலவில் எழுப்பினார். திரையுலகில் புகழோடு இருந்த கலைவாணர் வாழ்வில் திடீரென சோதனை சூழ்ந்தது.

1944-ம் ஆண்டு லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக நடிகர் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். 26 மாத சிறைவாசத்துக்கு பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கலைவாணர் சிறையில் இருந்து மீண்டபின்பு பழைய உற்சாகத்துடன் நடிக்கத்தொடங்கினார்.

1957 ஆகஸ்டு 30-ந் தேதி உடல்நல குறைவால் தனது 49-வது வயதில் மரணம் அடைந்தார்.

தமிழக அரசு சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்