கன்னட நடிகர் துவாரகிஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
கன்னட திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகர் துவாரகிஷ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.;
81 வயதாகும், நடிகரும், தயாரிப்பாளருமான துவாரகிஷ், கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக இறந்ததாக அவரின் மகன் தெரிவித்தார்.
துவராகேஷின் மறைவுக்கு கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய நண்பரின் நினைவாக டுவிட்டர் பதிவில், "எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷின் மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.. காமெடி நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தி பிடித்தவர்.. இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என கூறியுள்ளார்.
துவாரகேஷ், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்த 'அடுத்த வாரிசு' படத்தை தயாரித்துள்ளார். அதே போல் ரஜினிகாந்தின் ' நான் அடிமை இல்லை' என்கிற படத்தை, இயக்கி தயாரித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.