என் மீது 'ஆசிட்' வீசுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறேன் - கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் தனது சகோதரிக்கு நடந்த பயங்கரமான ஆசிட் வீச்சு குறித்து பகிர்ந்து இருக்கிறார்.;
டெல்லி துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் திராவகம் வீசி விட்டு தப்பி சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது சகோதரிக்கு நேர்ந்த திராவக வீச்சு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது சகோதரி ரங்கோலியும் இளம் வயதில் சாலையோர ரோமியோ ஒருவனால் திரவாக வீச்சு தாக்குதலுக்கு உள்ளானாள். அதில் இருந்து மீண்டுவர எனது சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அந்த சமயத்தில் எனது சகோதரி உடலாலும், மனதாலும் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டாள். எனது குடும்பம் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தது. அந்த சம்பவம் நடந்த பிறகு என்னை கடந்து செல்பவர்கள் யாரேனும் எனது முகத்தில் 'ஆசிட்' வீசி விடுவார்களோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது. அறிமுகம் இல்லாத நபர்கள் என்னை கடந்து செல்லும்போது இதுபோன்ற பயம் வரும். அப்போது எனது முகத்தை மூடிக்கொள்வேன்" என்றார்.