கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை மாதம் 12-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-19 15:20 GMT

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'இந்தியன்'. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா வேடத்தில் எதிரிகளை அழிப்பது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் பின்னர் ஒரு சில காரணங்களால் தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'இந்தியன் 2' திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற 22-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை மாதம் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்