ஜாக்கி ஷெராப் குரலை பயன்படுத்த தடை
ஜாக்கி ஷெராப்பின் தோற்றம், குரல், புகைப்படம், பெயர் உள்ளிட்ட கூறுகளை பயன்படுத்த கோர்ட் தடைவிதித்துள்ளது.;
மும்பை,
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் தமிழிலும் 'ஆரண்ய காண்டம்', 'பிகில்', 'ஜெயிலர்' உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது பெயர், படங்கள், குரல் என எதையும் தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் நருலா தலைமையிலான அமர்வு விசாரித்து ஜாக்கி ஷெராப்புக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஜாக்கி ஷெராப்பின் தோற்றம், குரல், புகைப்படம், பெயர் உள்ளிட்ட கூறுகளை பயன்படுத்த தடை விதித்ததுடன் ஒரு வாரத்துக்குள் வர்த்தக பயன்பாட்டில் இருந்து அவற்றை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அனுமதி பெறாமல் தனது குரல், உருவம், பெயர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று சட்ட ரீதியாக எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.