அந்தரங்க வீடியோ மிரட்டல் விவகாரம்; கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் நெருங்கிய நண்பர் கைது

கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் ரூ.2 கோடி மோசடி செய்து விட்டார் என கைது செய்யப்பட்ட இயக்குநர் ரமேஷ் கிட்டி கூறியுள்ளார்.;

Update: 2023-05-06 10:20 GMT

பெங்களூரு,

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். பிரபல நடிகரான இவருக்கு, அதிரடியான மற்றும் தனித்தன்மையான நடிப்பு ஆகியவற்றுக்காகவே ரசிகர்கள் வட்டாரம் அதிகம் உள்ளது.

இந்நிலையில், அவருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதனை அனுப்பிய நபர், கிச்சா சுதீப்பின் அந்தரங்க வீடியோவை கசிய விடுவேன் என அந்த கடிதத்தில் மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி சுதீப் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்பின் சுதீப் செய்தியாளர்களிடம் கூறும்போது, எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதனை யார் எனக்கு அனுப்பி இருக்கிறார் என எனக்கு தெரியும். யாரிடமிருந்து வந்திருக்கிறது என்றும் தெரியும்.

அது திரையுலகில் உள்ள சிலராலேயே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர்களுக்கு நான் சரியான பதிலடி தருவேன். கடினம் வாய்ந்த தருணங்களில் எனக்கு துணையாக இருந்தவர்களுக்கு ஆதரவாக நான் பணியாற்றுவேன் என கூறினார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் விக்ராந்த் ரோனா. சாகசம் மற்றும் திரில்லிங் காட்சிகள் நிறைந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், வசூலையும் குவித்து உள்ளது. நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடந்த ஏப்ரலில் வெளிப்படுத்தினார்.

அவர் பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்வேன். ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினார்.

சமூக ஊடகத்தில் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மர்ம நபர் மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கில், கிச்சா சுதீப்பின் நெருங்கிய நண்பரே அதில் தொடர்புடையவர் என விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் மற்றும் கிச்சா சுதீப்பின் அறக்கட்டை தலைவரான ரமேஷ் கிட்டி என்பவரை பெங்களூரு போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் சுதீப்பின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

அறக்கட்டளை நிதியை கையாள்வதில் இரண்டு பேருக்கும் இடையே தவறான புரிதல் இருந்து உள்ளது என கூறப்படுகிறது. எனினும், ரமேஷ் கூறும்போது, ரூ.2 கோடி பணம் முதலீடு செய்து இருந்தேன்.

கிச்சா சுதீப் தன்னை மோசடி செய்து விட்டார் என அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதனாலேயே மிரட்டல் கடிதம் அனுப்பினேன் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்