'சொர்க்கவாசல்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடைக்கோரி மனு

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடைக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-01-06 20:46 IST

பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான படம் 'சொர்க்கவாசல்'. மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்த நிலையில், 'சொர்க்கவாசல்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடைக்கோரி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த பரத் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது, இத்திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கருணாஸ் கட்ட பொம்மன் கதாபாத்திரத்தில் மது, போதைப் பொருள் விற்பனை செய்யும் காட்சிகளில் நடித்துள்ளார். இது கட்டபொம்மன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சொர்க்கவாசல் திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதிக்கவும் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டிமரிய கிளாட் அமர்வு இது குறித்த திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர் மற்றும் தமிழக திரைப்படத்துறையின் முதன்மை செயலர் ஆகியோர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்