தமிழ் திரையுலகில் கிழக்கே போகும் ரெயில் படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சுதாகர். இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.இனிமையான பாடல்களான கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, மலர்களே நாதஸ்வரங்கள் ஆகிய பாடல்கள் கிழக்கே போகும் ரெயில் படத்திலும், ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடல் நிறம் மாறாத பூக்கள் படத்திலும் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் தெலுங்கில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சுதாகர் உடல்நிலை குறித்து தெலுங்கு இணையதளங்களில் திடீர் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பார்த்து திரையுலகினர் பலரும் சுதாகர் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுதாகர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், "எனது உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி உள்ளன. அதை நம்பவேண்டாம். நான் உயிருடன் இருக்கிறேன். நன்றாக இருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை" என்று பேசி உள்ளார். சுதாகர் தற்போது நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.