'மஞ்சுமெல் பாய்ஸ்' படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
'மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னை,
கொடைக்கானல் குணா குகையில் விழுந்தவரை, நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வந்தது.
இந்நிலையில், அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்துக்காக ரூ.7 கோடி முதலீடு செய்தேன். தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி ஆகியோர் படம் வெளியான பிறகு தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 40 சதவீத பங்களிப்பை கொடுப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால், லாபம் மட்டுமல்லாமல் முதலீடு செய்த பணத்தைக்கூட திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், 'மஞ்சுமெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும்படி உத்தரவிட்டது. மேலும், தயாரிப்பாளர்கள் 3 பேர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்யும்படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
தற்போது, கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான செளபின் ஷாகிரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். படத்தின் மொத்த வசூலான ரூ. 220 கோடியில் ஏதேனும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததா எனவும் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.