ரசிகர் கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிப்பு

நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேர் 2 நாட்களுக்கு முன், 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.;

Update:2024-06-22 19:01 IST

புதுடெல்லி,

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் தூகுதீபா. இவருடைய தீவிர ரசிகரான ரேணுகாசாமி (வயது 33) என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ரேணுகாசாமியை படுகொலை செய்து விட்டனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனது தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்களை அனுப்பியதால் நடிகர் தர்ஷனே ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கியதாகவும், அதில் அவர் இறந்து போனதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமனஹல்லி பகுதியில் குடியிருப்பு அருகே சாக்கடை ஒன்றில் இருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டது.

அதனுடன், அவரை அடித்து, தாக்க பயன்படுத்தப்பட்ட லத்தி மற்றும் மரக்கட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தண்ணீர் பாட்டில், ரத்த கறைகள் மற்றும் பிற சான்றுகளும், சி.சி.டி.வி. பதிவுகளும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில், அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரசிகர் ரேணுகாசாமி படுகொலை தொடர்பாக நடிகர் தர்ஷனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடந்த 11-ந்தேதியில் இருந்து அவர், போலீஸ் காவலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஜூலை 4-ந்தேதி வரை அவர் காவலில் வைக்கப்படுவார். அவரை பரப்பன அக்ரஹார சிறைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

அவருடைய 4 கூட்டாளிகளும் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கர்நாடகாவில், தனித்தனியாக வெவ்வேறு சிறைகளில் அடைக்க வேண்டும் என அரசு சிறப்பு வழக்கறிஞர் கோரினார். இதற்கு தர்ஷனின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, அவரை பார்ப்பதற்காக திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். போலீசாரின் வேனில் இருந்த தர்ஷனும் அவர்களை நோக்கி கைகளை அசைத்தபடி சென்றார். கடந்த 2 நாட்களுக்கு முன், பவித்ரா கவுடா உள்பட 13 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்