ராமர் கோயிலுக்கு ரூ.2.66 கோடி நன்கொடை... சொன்னதை செய்த ஹனு-மான் படக்குழு
இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஐதராபாத்,
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார்.
இந்த படம் கடந்த ஆண்டு மே 12ம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சமீபத்தில் இந்த படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மெகாஸ்டார் சிரஞ்சீவி, 'ஹனு-மான் திரைப்படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாயை ராமர் கோயிலுக்கு வழங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி இந்த படத்திற்கு தற்போது வரை விற்பனையான 53 லட்சத்து 28 ஆயிரத்து 211 டிக்கெட்டுகளில் இருந்தும் ரூ.5 ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் திரட்டப்பட்ட ரூ.2.66 கோடியை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.