'வணங்கான்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-01-13 06:27 IST

சென்னை,

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் கடந்த 10-ந் தேதி வெளியான திரைப்படம் 'வணங்கான்'. இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், 'வணங்கான்' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த, வாய் பேசமுடியாத, காது கேட்காத அருண்விஜய் கன்னியாகுமரியில் தனது தங்கையுடன் வசிக்கிறார். பிழைப்புக்காக கிடைக்கும் வேலைகளை செய்கிறார். கண்முன் தவறு நடந்தால் அடிதடியில் இறங்குகிறார். அருண் விஜய்யை பாதிரியார் பார்வையற்ற பெண்கள் வசிக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்த்து விடுகிறார்.

இந்த நிலையில் அங்கு பணியாற்றும் வார்டனையும், ஊழியரையும் அருண் விஜய் குரூரமாக கொலை செய்துவிட்டு போலீஸில் சரண் அடைகிறார். கொலைக்கான பின்னணி என்ன? அதனை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்ததா? அருண் விஜய் தண்டிக்கப்பட்டாரா? என்பது மீதி கதை.

அருண் விஜய்க்கு மைல்கல் படம். எண்ணெய் பார்க்காத தலைமுடி, தூக்கம் மறந்த கண்கள் என சோகத்தை அள்ளி வழங்கும் கதாபாத்திரத்தில் நூறு சதவீதம் ஆத்மார்த்தமாக நடிப்பை வழங்கி அசத்தி உள்ளார். சண்டைக் காட்சிகளில் அவருடைய பங்களிப்பு மிரள வைக்கிறது. கல் நெஞ்சுக்குள் கசியும் காதலை முரட்டுத்தனமாக வெளிப்படுத்துவது அழகு. தங்கை மீது உள்ள பாசம் நெகிழ்வு.

விவேகானந்தர் கெட்டப்பில் அறிமுகமாகும் ரோஷினி பிரகாஷ் முதல் காட்சியிலேயே மனதில் ஒட்டிக்கொள்கிறார். காதல், வெகுளித்தனங்களில் அவர் செய்யும் கலாட்டா அழுத்தமாக நகரும் கதையை லேசாக்குகிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி வழக்கம்போல் தன் கடமையை சரியாக செய்து கதாபாத்திரத்துக்கு கண்ணியம் சேர்க்கிறார். நீதிபதி வேடத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு தேர்ந்த நடிப்பையும் வழங்கியுள்ளார் மிஷ்கின். பாசமான தங்கை கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ரிதா. 

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கதையோட்டத்தை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறது. சாம்.சி.எஸ். பின்னணி இசை நடக்கப்போகும் விபரீதங்களை தெளிவாக சொல்லி பார்வையாளர்களை இருக்கையோடு கட்டி போடுகிறது. வள்ளுவர் சிலையை வட்டமடித்து படமாக்கியது, புழுதி பறக்கும் சண்டைக் காட்சி, எளிய மக்களின் உணர்வுகளை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்சிப்படுத்தியது என படம் முழுவதும் தன் ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் குருதேவ்.

கொலையை நியாயப்படுத்தி கொலையாளியை தண்டிக்காமல் விடுவது, கொடூரமான வன்முறைகள் பலவீனம். வக்கிர எண்ணம் கொண்ட தீயவர்களை ஒரு மாற்றுத்திறனாளி இளைஞன் தண்டிக்கும் கதையை விறுவிறுப்பு குறையாமல் அழுத்தமாக காட்சிப்படுத்தி தமிழ் சினிமாவின் ஆளுமையாக எப்போதும் போல் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் பாலா.

Tags:    

மேலும் செய்திகள்