நடிகை பவித்ரா, தர்ஷனின் இரண்டாவது மனைவியா? - பதிலளித்த வழக்கறிஞர் அனில் பாபு
சமீபத்தில் நடிகை பவித்ரா, நடிகர் தர்ஷனின் இரண்டாவது மனைவி என்று தகவல்கள் வெளியாகின.;
சென்னை,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். தனது தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்களை அனுப்பியதால் நடிகர் தர்ஷனே ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கியதாகவும், அதில் அவர் இறந்துபோனதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 19 பேரும் பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகை பவித்ரா நடிகர் தர்ஷனின் இரண்டாவது மனைவி என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று தர்ஷனின் வழக்கறிஞர் அனில் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
பவித்ரா கவுடா தர்ஷனின் இரண்டாவது மனைவி என்பது முற்றிலும் தவறானது. அவர்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்கள் இணை நட்சத்திரங்களாக இருந்தனர். இப்போதும் அவர்கள் ஒரு நட்பு உறவையே கொண்டிருக்கின்றனர். வேறு எதுவும் இல்லை. தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி மட்டும்தான். இவ்வாறு கூறினார்.