'என் படத்தோடு உங்கள் படம் ரிலீசாக கூடாது': ஒப்பந்தம் போட்ட விக்ரம் - வீடியோ வைரல்
நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். மேலும் இதில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் அமரன். இப்படத்தை 'ரங்கூன்' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படமும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.அப்போது சிவகார்த்திகேயனின் கடின உழைப்பை நடிகர் விக்ரம் பாராட்டினார். அவர் பேசியதாவது,
கதாநாயகன் ஆவது என்பது உங்களுடைய தலையெழுத்து. அதற்காக கஷ்டப்படவில்லை என்று நான் சொல்லவில்லை. நீங்கள் கஷ்டப்படாமல் வரவில்லை. உங்களிடம் திறமை இருக்கிறது. சினிமாவுக்கு வருவது லக் என்று நினைக்கிறார்கள். ஆனால், திறமையும், கடின உழைப்பும் அதற்கு மிகவும் முக்கியம். அந்த இரண்டுமே உங்களிடம் இருக்கின்றன. அழகும் இருக்கிறது. ஆனால், என் படம் ரிலீஸ் ஆகும்போது உங்கள் படம் ரிலீசாக கூடாது. இவ்வாறு கூறினார். மேலும், இருவரும் ஒப்பந்தமும் போட்டுக்கொண்டனர்.
விக்ரமின் தங்கலானும், சிவகார்த்திகேயனின் அமரனும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், விக்ரமின் இந்த ஒப்பந்த வீடியோ வைரலாகி வருகிறது.