தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அம்ரித் ராம்நாத்

சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் "சித்தார்த் 40" படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்க உள்ளார்.

Update: 2024-10-15 01:18 GMT

சென்னை,

கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக நடிகர் சித்தார்த்தின் 40-வது திரைப்படமான "சித்தார்த் 40" என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தை '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார். இதில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

தற்பொழுது இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அம்ரித் ராம்நாத் சில மாதங்களுக்கு முன் வெளியான 'வருஷங்களுக்கு சேஷம்' என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இப்படத்தில் இடம்பெற்ற 'நியாபகம்' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

"சித்தார்த் 40" என்ற திரைப்படத்தின் மூலம் அம்ரித் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பிரபல பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மகன் அம்ரித் ராம்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்