'சூர்யா 45' படத்தில் இணைந்த யோகி பாபு மற்றும் ஷிவாதா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில் யோகி பாபு மற்றும் ஷிவாதா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. சமீபத்தில் திரிஷா இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர்.
இதற்கிடையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் 'லப்பர் பந்து' பட நடிகை சுவாசிகா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் 'சூர்யா 45' படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் தற்பொழுது பிரபல நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஷிவாதா ஆகியோர் 'சூர்யா 45' படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகை ஷிவாதா கடைசியாக கருடன் திரைப்படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.