அல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் சரியல்ல: முன்னாள் மந்திரி ரோஜா

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார்.

Update: 2024-12-15 12:31 GMT

திருப்பதி,

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜூன் வந்தார். அவரை பார்க்க வந்த ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவரின் மகன் படுகாயம் அடைந்தார்.

இதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நாம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அல்லு அர்ஜுனை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் உடனடியாக சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அல்லு அர்ஜுன் தாக்கல் செய்த மனு ஐதராபாத் ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அல்லு அர்ஜுன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரினர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இருப்பினும் ஜாமீன் உத்தரவின் நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி அல்லு அர்ஜுனை விடுவிக்க சஞ்சல்குடா சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் அல்லு அர்ஜுன் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறையில் இருந்தார். இதையடுத்து நேற்று காலை அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை அவரது குடும்பத்தினர் கட்டியணைத்து வரவேற்றனர்.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் கைதுக்கு முன்னாள் மந்திரி ஆர்.கே.ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிேறன். எந்தவொரு படத்துக்கும் நடிகர்கள் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த திரையரங்குகளுக்குச் செல்வது ஒரு தொழில் பாரம்பரியம். புஷ்பா-2 பட சிறப்பு காட்சிக்குச் செல்வது குற்றமா? அவர் ஒரு தேசிய விருது பெற்ற நடிகர். அவரை போலீசார் நடத்திய விதம் சரியல்ல" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்