சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து கவலையுடன் இருக்கிறேன்...நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு

புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து அல்லு அர்ஜுன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-12-16 03:08 GMT

ஐதராபாத்,

அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.

இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் இரவு முழுவதும் அவர் சிறையில் இருந்தார். பின்னர் ஐதராபாத் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜுனை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நடிகர்கள் நாக சைதன்யா, ராணா டகுபதி, இயக்குனர் சுகுமார், விஜய் தேவரகொண்டா ஆகியோர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜாவின் உடல்நலம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறுவன் ஸ்ரீதேஜ் குறித்து நான் ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறேன். தற்போது நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, அவரையும் அவரது குடும்பத்தினரையும் இந்த நேரத்தில் சந்திக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

எனது பிரார்த்தனைகள் அவர்களுடன் இருக்கும், மேலும் மருத்துவ மற்றும் குடும்பத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பை ஏற்க நான் உறுதியாக இருக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், அவரையும் அவரது குடும்பத்தினரையும் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்