கார் விபத்தில் நடிகை பவித்ரா மரணம் அடையவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்
என்னுடைய கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனை பார்த்த பவித்ராவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என கணவர் சல்லா கூறியுள்ளார்.;
பெங்களூரு,
கன்னட தொலைக்காட்சியில் நடித்து வந்த பிரபல நடிகை பவித்ரா ஜெயராம் 2 நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்த தகவல் வெளியானது. இதன்படி, மகபூப்நகர் மாவட்டத்தில் பத்பூர் நகராட்சிக்கு உட்பட்ட ஷெரிபள்ளி கிராமம் அருகே கார் வந்தபோது, கவிழ்ந்து சாலை தடுப்பானில் மோதியது.
இதன்பின்னர், பஸ் ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கி, பவித்ரா உயிரிழந்து விட்டார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், கார் விபத்தில் நடிகை பவித்ரா மரணம் அடையவில்லை என அவருடைய கணவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
இதுபற்றி பவித்ராவின் கணவர் சல்லா சந்திரகாந்த் கூறும்போது, காரில் 4 பேர் இருந்தோம். பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தோம். மதியம் 2.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டோம். மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.
நாங்கள் 3 மணிநேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டோம். இதன்பின் 80 அடி சாலையில் சென்றபோது, பஸ் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோது, காரின் மீது பஸ் உரசியது. இதனால், பயந்து போன ஓட்டுநர் காரை திருப்பியதும் சாலையின் பக்கவாட்டில் சென்றது. முன்னால் வந்த பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. விபத்தில் ஏற்பட்ட காயத்தில் பவித்ரா உயிரிழக்கவில்லை. கார் ஓட்டுநர் மற்றும் பவித்ராவின் சகோதரி மகள் முன் பக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. என்னுடைய கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனை பார்த்த பவித்ராவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அதிர்ச்சியில் அவர் பெருமூச்சு விட்டார். அது திடீரென ஏற்பட்ட ஸ்டிரோக் பாதிப்பு என டாக்டர்கள் கூறுகின்றனர். சாலை விபத்தில் எந்த காயமும் இன்றி மாரடைப்பு ஏற்பட்டு பவித்ரா உயிரிழந்தது உண்மையில் வலியேற்படுத்துகிறது என்றார். அவருடைய உயிரிழப்பை ஏற்று கொள்ள முடியவில்லை என்று கணவர் சல்லா அழுது கொண்டே கூறியுள்ளார்.
தர்சன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதற்காக பெங்களூருவுக்கு அவர்கள் சென்றனர். படத்தில் ஒப்பந்தம் செய்து விட்டு, திரும்ப இருந்தனர். அப்போது, ஜெமினி டி.வி.யில் இருந்து, நடிப்பதற்காக மற்றொரு வாய்ப்பு வந்துள்ளது. அதனால், பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி நாம் போகிறோம் என்று அவர்களிடம் சல்லா கூறியுள்ளார்.
இந்த சூழலில், நடிகை பவித்ரா மரணம் அடைந்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கில் திரிநயானி என்ற தொடரில் பிரபல நடிகையாக அறியப்படுபவர். கன்னடத்தில் பல தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார். ரோபோ பேமிலி, ஜோகாளி, நீலி, ராதாராமன் போன்ற பல தொடர்களில் அவர் நடித்திருக்கிறார்.