ஆட்டுடன் 'கோட்' படம் பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ்!

நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக் கொண்டு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2024-09-05 13:27 GMT

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' . இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 1100 திரைகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் மற்றும் பிற அண்டை மாநிலங்களிலும் காலை 4 மணி முதல் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் ஆட்டைத் தூக்கிக் கொண்டு படம் பார்க்க வந்த விடியோ வைரலாகி வருகிறது. 'கோட்' திரைப்படம் என்பதால் ஆட்டை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்.

எந்த ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனாலும் தவறாமல் வந்து படத்தைப் பற்றியும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் மிகத் தெளிவாக விமர்சனம் செய்பவர் கூல் சுரேஷ். அதுவும் படம் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பிராப்பர்ட்டியுடன் வந்து படத்தை புரொமோட் செய்வார்.

நடிகர் கூல் சுரேஷ் படத்தை பார்ப்பதற்கு முன்பே தளபதி தளபதி என கத்திக் கொண்டுதான் உள்ளே செல்கிறார். அப்போது அவர் கூறியதாவது:- 'கோட் படம் புரமோஷனுக்காக ஆட்டை கொண்டு வந்தேன். முதலில் யானை கொண்டு வரலாம் என்று இருந்தேன். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அனுமதி வாங்க வேண்டும் என்பதால் யானையை கொண்டு வரவில்லை. நான் யானையை கொண்டு வருவதற்காக காரணம் என்னவென்றால் அவரது கட்சி கொடியில் யானை இருப்பதுதான். தளபதியின் கோட் 2026-ம் ஆண்டு போடுங்க ஓட்டு. ' இவ்வாறு கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்