74-வது 'எம்மி விருது' வழங்கும் விழா - விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்குவிட் கேம், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடர்கள்
சிறந்த நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நடித்த லீ ஜுங் ஜேவுக்கு வழங்கப்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்க தொலைக்காட்சி உலகில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'எம்மி' விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 74-வது எம்மி விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட எம்மி விருதுகளில் 8 விருதுகளை வென்று அசத்திய 'சக்ஸஷன்' தொடர், இந்த முறையும் சிறந்த தொடருக்கான விருது உள்பட மொத்தம் 4 விருதுகளை வென்று மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே போல் சர்வதேச ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பிரபல தென் கொரிய வெப்சீரீஸான 'ஸ்குவிட் கேம்' 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்பட 6 விருதுகளை தட்டிச் சென்றது.
சிறந்த நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நடித்த லீ ஜுங் ஜேவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது 'யூஃபோரியா' தொடரில் நடித்த 'ஸ்பைடர்மேன்' புகழ் சென்டாயாவுக்கு வழங்கப்பட்டது. இது தவிர 'யூஃபோரியா' தொடர் மேலும் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது.
சிறந்த நகைச்சுவைத் தொடர் உள்பட 4 விருதுகளை 'தெட் லாஸ்கோ' தொடர் வென்றது. மேலும் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட 'ஸ்டேரஞ்சர் திங்ஸ்' தொடர் மொத்தம் 5 விருதுகளை வென்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.