பாடகியான ஷங்கர் மகள்

ஷங்கரின் மகள் அதிதி பாடகியாக அறிமுகமாகி உள்ளார். தமன் இசையில் ரோமியோ ஜூலியட் என்ற பாடலை அதிதி பாடி உள்ளார்.

Update: 2022-02-07 08:39 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கும் ஷங்கரின் மகள் அதிதி, விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அவர் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. இந்த நிலையில் அதிதி பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். 

தெலுங்கில் கானி என்ற பெயரில் தயாராகும் படத்தில் தமன் இசையில் ரோமியோ ஜூலியட் என்ற பாடலை அதிதி பாடி உள்ளார். அதிதி ஏற்கனவே முறைப்படி சங்கீதம் கற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கானி படத்தில் வருண் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். உபேந்திரா, ஜெகபதிபாபு, சுனில் ஷெட்டி, நவீன் சந்திரா, நதியா, சாயி மஞ்ரேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரன் கோரபதி இயக்குகிறார். பாடகியான அதிதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“என்னுடைய முதல் பாடல். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். மற்றொரு கனவும் நனவாகிவிட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதிதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்