வால்பாறையில் படகு சவாரி தொடங்கப்படுமா?


வால்பாறையில் படகு சவாரி தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 31 Aug 2023 12:45 AM GMT (Updated: 31 Aug 2023 12:45 AM GMT)

தொடர் விடுமுறையின்போது மட்டுமாவது வால்பாறையில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்


வால்பாறை


தொடர் விடுமுறையின்போது மட்டுமாவது வால்பாறையில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


படகு இல்லம்


கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள பச்சைபசேலேன காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிறமாவட்டங்கள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


இந்த நிலையில் வால்பாறையில் போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் வாழைத்தோட்டம் புதிய பஸ் நிலையம் அருகே படகு இல்லம், பி.ஏ.பி.காலனி பகுதியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. இந்த படகு இல்லம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த படகு இல்லத்தை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆம்... அடுத்த நாளே படகு இல்லம் மூடப்பட்டது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பன உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.


பயனின்றி கிடக்கிறது


இந்த நிலையில் கடந்த மே மாதம் கோடைவிழா நடைபெற்றபோது, 3 நாட்கள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது வரை படகு இல்லம் திறக்கப்படவில்லை.


பல லட்சம் செலவில் கட்டப்பட்ட படகு இல்லம் யாருக்கும் பயனின்றி இருந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-


எதிர்பார்ப்பு


தொடர் விடுமுறை நாட்களில் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் படகு இல்லம் செயல்படாததால் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. தற்போது ஓணம் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறையில் குவிந்துள்ளனர்.


இதுபோன்று தொடர் விடுமுறை நாட்களில் மட்டுமாவது படகு சவாரிக்கு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைப்பதுடன், உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் உயரும். எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்று, தொடர் விடுமுறை நாட்களில் மட்டுமாவது படகு சவாரியை தொடங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story