அண்ணாமலை பல்கலை.யின் பி.லிட். பட்டத்திற்கு அங்கீகாரம்: ராமதாஸ் வரவேற்பு


அண்ணாமலை பல்கலை.யின் பி.லிட். பட்டத்திற்கு அங்கீகாரம்: ராமதாஸ் வரவேற்பு
x

கோப்புப்படம் 

பி.லிட். பட்டம் அரசு வேலைவாய்ப்புகளில் பி.ஏ. தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு சமமானது என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் இளநிலை இலக்கியம் (பி.லிட்.) பட்டம் அரசு வேலைவாய்ப்புகளில் பி.ஏ. தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு சமமானது என்று தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த முடிவின் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். படித்து தேர்ச்சி பெற்ற 164 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்குவதில் ஏற்பட்ட தடை நீக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வித்துறையின் முடிவு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 164 பேர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது தவறு என்பதையும், அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட். பட்டம் பி.ஏ. தமிழ் பட்டத்திற்கு இணையானதுதான் என்பதை ஆதாரங்களுடன் விளக்கி கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதை ஏற்றுக் கொண்டு பி.லிட். பட்டம் அரசு வேலைவாய்ப்புகளில் பி.ஏ. தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு சமமானது என்று அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் பெரும் சிக்கல் தீர்ந்திருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் குரலுக்கு கிடைத்த வெற்றி ஆகும். உயர்கல்வித்துறையின் முடிவை ஏற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story