நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் வாகன போக்குவரத்து தொடக்கம்


நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் வாகன போக்குவரத்து தொடக்கம்
x
தினத்தந்தி 23 Jan 2020 10:15 PM GMT (Updated: 23 Jan 2020 8:17 PM GMT)

நெல்லை கொக்கிரகுளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலத்தில் வாகன போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆங்காங்கே பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு ஒவ்வொன்றாக கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நெல்லை டவுனையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் வகையில் கொக்கிரகுளத்தில் உள்ள சுலோச்சன முதலியார் பாலத்தின் அருகே கூடுதலாக ஒரு பாலம் கட்டுவதற்கு ரூ.16½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த புதிய பால கட்டுமான பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. 10 தூண்கள், நடைபாதை வசதியுடன் கூடிய இந்த பாலம் 14.8 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து பாலத்தின் இருபுறமும் ரோடு மேம்படுத்தப்பட்டு பாலத்துடன் இணைக்கப்பட்டது. இந்த பணியும் முடிவடைந்து விட்டதால் நேற்று புதிய பாலத்தின் மீது வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதலில் இருசக்கர வாகனங்களும், அடுத்து ஆட்டோ, கார்களும், இறுதியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் பழைய சுலோச்சன முதலியார் பாலம் வாகன நெருக்கடி இன்றி காணப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் பணி முடிவடைந்து உள்ளது. இணைப்பு சாலையில் தார் ரோடு மட்டும் அமைக்க வேண்டியுள்ளது. அந்த ரோடு உறுதித்தன்மை அடைவதற்காக தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த பலாப்பழ ஓடையின் மீது புதிய பாலம் கட்டும் பணியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஓரிரு நாட்களில் தார் ரோடு போடப்பட்டு, அரசின் அனுமதி பெற்று முறைப்படி போக்குவரத்து தொடங்கி வைக்கப்படும்” என்றனர்.

Next Story