வீட்டு மனை வாங்குவோர் கவனிக்க வேண்டிய சுப சகுனங்கள்

வீடு கட்டுவதற்கு அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவதற்கான கட்டிடங்களை அமைப்பதற்கு காலி மனை வாங்குவோர் கவனிக்க வேண்டிய சுப சகுனங்கள் குறித்து பார்ப்போம்.

Update: 2024-10-02 06:09 GMT

நமது பாரம்பரிய முறைப்படி எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்க வீட்டிலிருந்து வெளியில் புறப்படும் பொழுது நல்ல சகுனம் உள்ளதா என்று கவனிக்கும் முறை இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சகுனங்களின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல விதமாக நடக்கும் என்ற குறிப்பும் முன்னோர்களால் தரப்பட்டுள்ளது.

அந்த வகையில் வீடு கட்டுவதற்கு அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவதற்கான கட்டிடங்களை அமைப்பதற்கு காலி மனை வாங்க செல்லும் பொழுது கவனிக்க வேண்டிய சகுனங்கள் பற்றி பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

நாதஸ்வர இசை ஒலிப்பது, கோவில் மணி ஓசை கேட்பது, மணமக்கள் எதிரே வருவது, திருமணப் பெண்ணை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி, கோயிலில் பூஜைகள் நடப்பது, பசுமாடு எதிரில் வருவது, தம்பதிகள் ஜோடியாக எதிரே வருவது, நாய்க்குட்டிகள் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பது, பூஜை பொருட்கள், குழந்தை பிறந்ததாக வெளியில் உள்ளவர்கள் பேசும் செய்தி கேட்பது, அழுக்கு நீக்கப்பட்ட சுத்தமான துணியை ஒருவர் எதிரே கொண்டு வருவது, தெய்வ விக்கிரகங்கள் திருவீதி உலா, பிரசவம் முடிந்து குழந்தையை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வரும் காட்சி, கிரகப்பிரவேச வீடு, திருமணம் நடப்பது, இறந்தவரது இறுதி ஊர்வலம் ஆகியவை சுப சகுனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட சகுனங்களை பார்க்கும் பொழுது மனை நன்றாக அமைந்து அதில் கட்டுமான பணிகள் மங்களகரமாக நடக்கும் என்பதாக நம்பப்பட்டது.

மனையின் தரம் பற்றி குறிப்பிடப்படும் பொழுது முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம் என்று நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-

வடக்கு திசையில் சாலை, கிழக்கு திசையில் சாலை, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு திசைகளிலும் சாலைகள் அமைந்துள்ள மனை முதல் தரம் ஆகும்.

வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும், வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும், கிழக்கு, மேற்கு ஆகிய இரு திசைகளிலும், வடக்கு, தெற்கு ஆகிய இரு திசைகளிலும், கிழக்கு, தெற்கு ஆகிய இரு திசைகளிலும், வடக்கு, மேற்கு ஆகிய இரு திசைகளிலும் சாலைகள் அமைந்துள்ள மனை இரண்டாம் தரம் ஆகும்.

வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும், கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும், மேற்கு திசையில் மட்டும், தெற்கு திசையில் மட்டும், மேற்கு, தெற்கு ஆகிய இரு திசைகளில் மட்டும் சாலைகள் அமைந்த மனை மூன்றாம் தரம் ஆகும்.

நேர் திசையில் அமையாமல் கோண திசைகளான வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி அமைந்த மனைகள் நான்காம் தர மனைகளாக குறிப்பிடப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளை கவனத்தில் கொண்டு வீடு மற்றும் வியாபார ஸ்தலங்கள் அமைப்பதற்கான மனைகளை தேர்வு செய்வது ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

செல்: 9962077412

Tags:    

மேலும் செய்திகள்