மாடிப்படிகள் எப்படி இருந்தால் நல்லது..? வாஸ்து சாஸ்திர விதிமுறைகள்

வீட்டின் உள்ளே அமைந்துள்ள மாடிப்படிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் அமைக்கப்படாமல், வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியவாறு இருக்கலாம்.

Update: 2024-07-11 06:01 GMT

இன்றைய காலகட்டத்தில் கட்டுமான பொறியியல் விதிகளுக்கு ஏற்ப வாஸ்து சாஸ்திர விதிகளும் பொருத்தமாக அமைவதில்லை. அவ்வகையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அல்லது கட்டிய வீட்டை வாங்கிய பலரும் மாடிப்படி அமைப்பு வாஸ்து ரீதியாக இல்லையே என்ற மனக்குறையோடு இருப்பார்கள். அந்த நிலையில் வாஸ்து ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய எளிய விதிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.

படிக்கட்டுகள் அல்லது அதன் கைப்பிடிச் சுவர் இடிந்திருப்பது, அவற்றில் விரிசல்கள் இருப்பது போன்ற குறைகளை உடனடியாக கவனித்து சீர் செய்வது அவசியம்.

மாடிப்படிகளில் ஏறிச்செல்லும் முறை கடிகார சுற்று அமைப்பில் இருக்க வேண்டும். ஏறுபவர் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கியோ மேலே செல்வது போல இருக்க வேண்டும். அதற்கு மாறாக இருந்தால் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் படியின் இரு புறங்களிலும் உயிரோட்டமுள்ள மலர்கள் கொண்ட பிளவர் வாஸ் வைக்க வேண்டும்.

வீட்டின் ஈசானிய திசையில் மாடிப்படிகள் அமைந்திருந்தால் முதல் படிக்கட்டின் இரு புறமும் செம்பு பாத்திர பிளவர் வாஸ் அல்லது தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து அதில் வாசமுள்ள மலர்களை போட்டு வைக்கலாம்.

குடியிருப்புகளில் வீட்டின் தலைவாசலுக்கு எதிராக மாடிப்படிகள் அமைந்திருக்கும் நிலையில், எண்கோண கண்ணாடி அல்லது பெங்சூயி பாகுவா கண்ணாடியை தலைவாசலுக்கு மேலே பொருத்தலாம். அதில் படிகள் எதிரொலிக்கப்படுவதால் வாஸ்து பாதிப்பு அகலுவதாக ஐதீகம்.

வீட்டின் உள்ளே அமைந்துள்ள மாடிப்படிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் அமைக்கப்படாமல், வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியவாறு இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் படிகளின் எண்ணிக்கையை 11, 13, 15, 17, 19, 21 என்ற ஒற்றைப்படை எண்களில் அமையும்படி சிறிய மாற்றம் செய்து கொள்ளலாம்.

பூஜையறை, சமையலறையை ஒட்டியவாறு படிக்கட்டுகள் இருந்தால் அவற்றுக்கு அடர்த்தியான வண்ணங்களில் பெயிண்டிங் செய்வது கூடாது. மாறாக, வெளிர் நிற பெயிண்டிங் செய்யப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Tags:    

மேலும் செய்திகள்