அதிர்ஷ்டங்களை அருளும் பஞ்சபூத சக்திகள்

பஞ்சபூத சக்திகளில் மூன்றாவதாக உள்ள நெருப்பு என்ற சக்தியை குறிப்பிடும் திசை தென்கிழக்கு ஆகும். ஒரு வீட்டில் சமையலறை அமைக்கப்படும் பகுதி இதுவாகும்.

Update: 2024-07-18 07:49 GMT

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பது சித்தர் பெருமக்கள் கருத்தாகும். அந்த வகையில் உடலாகிய பிண்டம் பஞ்சபூத சக்தியின் அடிப்படையில் செயல்படுகிறது. அத்துடன், நவக்கிரக சக்திகளும் மறைமுகமாக உடல் மற்றும் மனம் ஆகியவற்றை ஆட்டுவிக்கின்றன.

கிரகம் என்பதற்கு வீடு என்றும், நவக்கிரகங்கள் என்றும் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. அசையும் பூமியின் மீது அசையாமல் நாம் கட்டிய வீட்டில் பஞ்சபூத சக்திகளும் நவக்கிரக சக்திகளும் நம்மை அறியாமல் செயல்பட்டு வருகின்றன. பூமியை பொறுத்தவரை நவக்கிரக சக்திகளை விட நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களே சக்தி பெற்றவை என்பது சித்தர்கள் வாக்கு. அதன் அடிப்படையில் பஞ்ச பூத சக்திகளை பயன்படுத்தி வாஸ்து குறைபாடுகளை எளிமையாக அகற்றிக் கொள்ளும் வழிகளை இங்கே காணலாம்.

பஞ்சபூத சக்திகளில் முதலாவதான நிலம் என்ற சக்திக்கு உரிய பகுதி தென்மேற்கு ஆகும். அது கன்னி மூலை, நிருதி மூலை என்று குறிப்பிடப்படும். வீட்டின் தென்மேற்கு பகுதி கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டிய இடமாகும். வெற்றிடமாக இருப்பது கூடாது. இந்த பகுதியில் தரையடி தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்படக்கூடாது. நிலம் என்ற பஞ்சபூத சக்தி அளிக்கும் நிம்மதி, செல்வம் ஆகியவற்றை பெற வீட்டின் முன்புறம் மண் தரை அமைத்து அதில் மரம், செடி-கொடிகள், பூச்செடிகளை வளர்க்கலாம். மாடி வீடுகளாக இருந்தால் மண் தொட்டியில் பசுமையான பூச்செடிகளை வைத்து வளர்க்கலாம்.

பஞ்சபூத சக்தியில் இரண்டாவதான நீர் சக்திக்கு உரிய திசை வடகிழக்கு என்ற ஈசானியம் ஆகும். ஆற்றலின் மூலமாக உள்ள இந்த திக்கு அளிக்கும் கல்வி உள்ளிட்ட செல்வ வளங்களை பெற பூமிக்கு கீழ் அமைக்கப்படும் நிலத்தடி தண்ணீர் தொட்டிகளை வடகிழக்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும். வீட்டின் தலைவாசல் பகுதியில் மண் அல்லது செப்பு பாத்திரத்தில் நீர் வைத்து அதில் அன்று மலர்ந்த மலர்களை தூவி வைக்கலாம்.

பஞ்சபூத சக்திகளில் மூன்றாவதாக உள்ள நெருப்பு என்ற சக்தியை குறிப்பிடும் திசை தென்கிழக்கு ஆகும். அதை ஆக்கினேயம் என்றும் குறிப்பிடுவார்கள். ஒரு வீட்டில் சமையலறை அமைக்கப்படும் பகுதி இதுவாகும். இந்த திசையின் அமைப்பை பொறுத்தவரை வீட்டில் இருப்பவர்களுடைய உடல் நலம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த திசை அளிக்கும் ஆரோக்கிய சக்திகளை பெறுவதற்காக வீட்டில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் அல்லது வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம்.

காற்று என்பது பஞ்சபூத சக்திகளில் நான்காவதாக உள்ள ஆற்றல் வடிவமாகும். இந்த சக்தியை குறிக்கும் திசை வடமேற்கு என்ற வாயவியம் ஆகும். இந்த திசை வீட்டில் குடியிருப்பவர்களது மன நிலையையும், செய்யும் செயல்களையும் வழிநடத்தக் கூடியதாகும். காற்று சக்தி மூலம் வீட்டில் நன்மைகள் ஏற்பட வேண்டும் என்றால் காலையும், மாலையும் வீடுகளில் வாசனை மிக்க ஊதுபத்தி அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க வேண்டும். காலை, மாலைகளில் வாசனை மிக்க சாம்பிராணி புகையும் பரவச்செய்யலாம்.

ஆகாயம் என்பது ஐந்தாவதாக உள்ள மிக வலிமையான பஞ்சபூத சக்தியாகும். இது வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் பரவி உள்ள சக்தியாகும். பஞ்சபூதங்களின் முதல் மூன்று சக்திகளை கண்ணால் பார்க்க முடியும். காற்றை உணர முடியும். ஆகாயத்தை பார்க்கவோ, உணரவோ இயலாது. சப்த அலைகள் மூலம் செயல்படும் ஆகாய சக்தி மனதில் நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தும் திறன் பெற்றது. அதனால் வீட்டில் அடிக்கடி இனிய இசை அல்லது மந்திர ஒலிகளை ஒலிக்கச் செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Tags:    

மேலும் செய்திகள்