வங்காளதேசத்தில் வாழும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு

Update:2024-08-12 13:05 IST

வங்காளதேசம் உருவாக முக்கிய காரணமாக, அண்டை நாடான இந்தியா இருந்ததை இன்று அங்குள்ள இளைஞர் சமுதாயத்துக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரலாறு அதை எப்போதும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். 1971-ம் ஆண்டுக்கு முன்பு இன்றைய வங்காளதேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது.

ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் அங்குள்ள மக்கள் நடத்திய விடுதலைப் போரில் இந்திய ராணுவம் பக்க பலமாக துணை நின்றதால், அது இந்தியா-பாகிஸ்தான் போராக மாறியதுடன் அந்த போரில் இந்தியா அடைந்த வெற்றியால்தான் வங்காளதேசம் என்ற தனி நாடு பிறந்தது. அன்று முதல் வங்காளதேசம் இந்தியாவின் நட்பு நாடாகவே இருந்துவந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக முஜிபுர் ரகுமானின் மகளான ஷேக் ஹசீனா பிரதமராக இருந்து, அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருந்தாலும் விடுதலைப் போரில் பங்குபெற்று உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இடஒதுக்கீடு என்று கொண்டுவந்த சட்டம், இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தது.

எல்லோருடைய கோபமும் ஷேக் ஹசீனா மீது திரும்பியது. அந்த நேரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் பற்றி ஷேக் ஹசீனா சொன்ன சில வாசகங்கள் பெருந்தீயாக பரவியது. நாடு முழுவதும் பற்றியெரிந்த மாணவர்களின் போராட்டத்தின் தீவிரத்தை அடக்க முடியாமல் அரசு தடுமாறியது. இதனால் ராணுவத்தின் கட்டளைக்கிணங்க ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்காளதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அதில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள். போராட்டக்காரர்கள் இந்தியர்களையும் இந்து கோவில்களையும் இந்தியர்கள் நடத்தும் வணிக தலங்களையும் குறிவைத்து தாக்கி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் ராணுவம் ஒரு இடைக்கால அரசை அமைக்க திட்டமிட்டது. போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறிய ஆலோசனைப்படி, நோபல் பரிசு பெற்ற 84 வயதான முகமது யூனுஸ் தலைமையில் 17 பேர் கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 2 பேர் அங்கம் வகித்துள்ளனர். சிறந்த பொருளாதார நிபுணரான யூனுஸ் தனது அரசில் பல்வேறு நிபுணர்களையும் ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகளையும் சேர்த்து இருக்கிறார். பதவியேற்றவுடன் அவர், "என்மீது நம்பிக்கை வையுங்கள். என்னை நம்பினால் உடனடியாக நாட்டில் எங்கும் எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது. வன்முறை இருக்கக்கூடாது. இதுதான் நமது முதல் பொறுப்பாகும். நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்றால், நான் இருந்து பயனில்லை" என்று சொன்னது, அவர் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களும் அவரது முதல் கடமையாக அங்குள்ள இந்தியர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடைபெறாமல் இருப்பதையும், இந்திய மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்திய அரசும் வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி தலைமையில் 5 உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே நட்புறவும் வர்த்தக உறவும் மீண்டும் தழைக்கவேண்டும் என்றால், இந்தியர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கும் சூழ்நிலை தொடர்ந்தால்தான் முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்