கிராமப்புற பட்டதாரிகளுக்கு கைகொடுக்கும் இளைஞர்..!

ஐ.டி. வேலைகளை பெறுவதில், கிராமப்புற இளைஞர்கள் தடுமாறுகிறார்கள்’’ என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், சரவணன்.;

Update:2023-06-17 08:44 IST

பட்டப்படிப்பை நிறைவு செய்திருப்பது மட்டுமல்ல, இக்கட்டான சூழலை சமாளிக்கக்கூடிய ஆங்கில பேச்சாற்றலும், கணினி மொழி அறிவும் ஐ.டி. துறையினரின் அவசியமான எதிர்பார்ப்பாக இருக்கிறது

சரவணன்ஐ.டி. வேலைகளை பெறுவதில், கிராமப்புற இளைஞர்கள் தடுமாறுகிறார்கள்'' என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், சரவணன்.

''கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு, ஐ.டி. துறையில் பிரகாசமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கோடிங் திறனும், ஆங்கில புலமையும் கிராமப்புற இளைஞர்களிடம் இருந்தபோதிலும், அவர்களுக்குள் இருக்கும் ஒருவித தயக்கமும், தங்களை தாங்களே குறைத்து எடைபோடும் மனப்பக்குவமும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை குறைத்துவிடுகிறது. அதனால்தான், ஐ.டி. வேலைகளை பெறுவதில், கிராமப்புற இளைஞர்கள் தடுமாறுகிறார்கள்'' என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், சரவணன்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இருக்கும் கூட்டுக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர், பெங்களூரு நகரில் பிறந்து வளர்ந்தவர். அங்கு, ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவிட்டு, இப்போது பொன்னமராவதியில் செட்டிலாகி இருக்கிறார். இவர், மீண்டும் தமிழகத்திற்கு வந்த காரணமும், இங்கு பணியாற்றும் விதமும் நம்மை ஆச்சரியப்படுத்து கிறது. இந்த நேர்காணலில் அதை பகிர்ந்து கொள்கிறார்.

''பி.இ. படித்து முடித்துவிட்டு, ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், சுயமாகவே ஒரு 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அந்தசமயத்தில், என்னுடைய தந்தையின் ஆசையும் என்னை தமிழ்நாடு நோக்கி அழைத்து வந்தது. ஆம்...! பிறந்த ஊருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசையில், என்னுடைய தந்தை என்னிடம் பேசினார். குறிப்பாக, கிராமப்புற பட்டதாரிகளுக்கு, ஐ.டி. துறையில் வேலை கிடைக்கும்படியான முயற்சிகளில் ஈடுபட வழிகாட்டினார். என்னுடைய ஸ்டார்ட் அப் கனவு ஒருபக்கம், தந்தையின் ஆசை மறுபக்கமாக... தமிழ்நாடு நோக்கி வந்தேன்'' என்றவர், இப்போது விர்ச்சுவல் கம்யூனிட்டி மேலாண்மை சம்பந்தமான 'ஸ்டார்ட் அப்' முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதனுடன், கிராமப்புற பட்டதாரிகளை, ஐ.டி. நிறுவன ஊழியர்களாக மாற்றும் பணியிலும் ஈடுபடுகிறார்.

''நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு, நாமும் ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்பதுதான், என்னுடைய தந்தையின் ஆசை. அதை நன்கு உணர்ந்து கொண்டதால், பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராமப்புற இளைஞர்களுக்கு, ஐ.டி. துறை வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். கிராமப்புற மாணவர்களை பொறுத்தவரையில், ஐ.டி. நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை இருந்தும், ஒருசில குறைகளினால் அவர்களது வேலைவாய்ப்பு பறிபோகிறது.

குறிப்பாக, கோடிங் என்ற கணினி மொழி அறிவும், ஆங்கில அறிவும்... ஐ.டி. வேலைக்கான அஸ்திவாரங்கள். அதில் கவனம் செலுத்தினாலே, குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்தில் தொடங்கி, பல லட்சங்கள் வரை சம்பளம் பெறலாம்'' என்றவர், அதற்காக கிராமப்புற இளைஞர்களுக்கு தன்னுடைய சகோதரர் வழியாக ஆங்கில அறிவு பயிற்சிகளை வழங்குகிறார். அதேசமயம், ஜாவா மற்றும் பைத்தான் போன்ற எளிமையாக கற்றுக்கொள்ளக்கூடிய கோடிங் கல்வியையும் புகட்டுகிறார்.

''பட்டப்படிப்பை நிறைவு செய்திருப்பது மட்டுமல்ல, இக்கட்டான சூழலை சமாளிக்கக்கூடிய ஆங்கில பேச்சாற்றலும், கணினி மொழி அறிவும் ஐ.டி. துறையினரின் அவசியமான எதிர்பார்ப்பாக இருக்கிறது. இவ்விரண்டையும்தான் நான் கற்றுக்கொடுக்கிறேன். இ-மெயிலுக்கு பதில் கொடுப்பது, அவசரமான செல்போன் அழைப்புகளை ஏற்று ஆங்கிலத்தில் பேசுவது, இக்கட்டான சூழலில் புரோகிராமை மாற்றி எழுதுவது... இப்படி கடினமான சூழல்களை சமாளிக்கும் பயிற்சிகளுடன் கூடிய வகுப்புகளை முன்னெடுத்திருக்கிறேன். நிறைய இளைஞர்கள் ஆர்வமாக கற்றுக்கொண்டு, ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்'' என்றவர், இளைஞர்களை தொடர்ந்து கோடிங் அறிவை பள்ளிக்குழந்தைகள் மத்தியிலும் விதைத்து வருகிறார்.

''கோடிங் மொழிகளையும், ஆங்கில அறிவையும் இளைஞர்களிடம் வளர்ப்பதை காட்டிலும், குழந்தைகளிடம் வளர்ப்பது சுலபம். அதனால்தான், கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கோடிங் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, வேலைக்கு செல்லும் காலகட்டத்தில் சிறப்பாக பயன்படும். மேலும் ஆங்கில அறிவை, திடீரென புகுத்துவதை விட, இளம் வயதில் இருந்தே வளர்த்தெடுக்கும்போது, அது முழுமையானதாக வளர்ந்து நிற்கும். அதைதான் செய்து கொண்டிருக்கிறோம்'' என்றவர், அடுத்த சில வருடங்களில், ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கி கொடுக்கும் முனைப்போடு தீவிரமாக பணியாற்றுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்