டிரெண்டாகும், பனை ஓலை கடிகாரம்..!

‘கற்பக தரு’வான பனை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் எண்ணற்ற நன்மைகளை தருகின்றன. பழந்தமிழர்கள் அவற்றின் பலன்களை முழுமையாக அனுபவித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

Update: 2023-10-16 08:42 GMT

 

காலமாற்றத்துக்கு ஏற்ப பனைப் பொருட்கள் ஓரங்கட்டப்பட்ட சூழலில், அவற்றின் ஒப்பற்ற நன்மைகளை தற்போது உணர தொடங்கி இருக்கும் இளம் தலைமுறையினர் தேடி வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அவர்களின் ரசனைக்கேற்ப பனைப் பொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்டு, கண்ணைக்கவரும் வகையில் எண்ணற்ற கலைப்பொருட்களாகவும் அழகுருவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. அவை கண்காட்சிகள் ரூபத்தில் காட்சிப்பொருட்களாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட காட்சி திருவிழா சமீபத்தில் நெல்லையை அடுத்த தருவையில் அரங்கேறியது.

தேசிய பனை திருவிழாவாக கொண்டாடப்பட்ட அதில் அலங்கார, கலைப்பொருட்களாக, அன்றாட பயன்பாட்டு பொருட்களாக எண்ணற்ற வடிவங்களில் பனைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் பனை பொருட்களால் வேயப்பட்ட முறத்தில் சுவர் கடிகாரங்களை நேர்த்தியாக அமைத்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

தென்மாவட்டங்களில் பனை தொழிலையும், பனை தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த பனை திருவிழா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனைத்து பனைப்பொருட்களையும் பார்வையிட்டு ரசித்தார். அவற்றில் பனை ஓலை சுவர் கடிகாரத்தை பார்த்து வியந்தவர், அதற்கான பணத்தை வழங்கி அதனை வாங்கி சென்றார். தற்போது ஐதராபாத் கவர்னர் இல்லத்தை அந்த பனை ஓலை சுவர் கடிகாரம் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

பனைத்தொழிலை நம்பி இருக்கும் கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடத்தப்படும் கண்காட்சி குறித்தும், பனைப்பொருட்களில் தயாராகும் கலைப்படைப்புகள் குறித்தும் நெல்லை கொண்டா நகரம் சாரதாநகரில் மதிப்புக்கூட்டப்பட்ட பனைப்பொருட்கள் தயாரித்து வரும் ஆனந்தபெருமாள் பகிர்ந்து கொள்கிறார்.

''கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய பொருட்களை தற்போது பொதுமக்கள் தேட தொடங்கி உள்ளார்கள். அந்த வகையில்தான் பனை ஓலை, பனை நார் கொண்டு தயாரிக்கப்பட்ட கடிகாரமும் இடம் பெற்றுள்ளது. நெல்லை கொண்டாநகரம் சாரதா நகரில் இதற்கான தொழிலகம் அமைத்து உள்ளோம். தேங்காய் சிரட்டையில் இருந்து கலைப்பொருட்கள் தயாரிப்பதுதான் எங்களுடைய முதன்மையான தொழில். அந்த ஊரை சேர்ந்த 6 பெண்களுக்கும் பயிற்சி அளித்து தயார் செய்ய வைக்கிறோம்.

இதேபோல் இந்த பகுதியில் வேறு என்னென்ன பனை சார்ந்த தொழில்கள் இருக்கிறது என்று ஆராய்ந்தபோது பனை ஓலையில் பெட்டிகள், கிலுக்கு உள்ளிட்டவை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த தொழில் தற்போது மங்கி விட்டது. கால மாற்றத்துக்கேற்ப இதனை நவீன வகையில் மெருகேற்றும் வகையில் பனை நார், ஓலையில் செய்யப்பட்ட தட்டு, முறம் ஆகியவற்றில் கடிகாரத்தை பொருத்தினோம். எங்கள் வீட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த பனை கடிகாரத்தை மாட்டி வைத்து உள்ளோம். அது இன்றளவும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஓரிரு முறை பேட்டரி மட்டும் மாற்றி உள்ளோம். கேரளாவில் மூங்கில் சட்டத்தில் இதுபோன்ற கடிகாரத்தை பார்த்தேன். அதன் பிறகுதான் பனை நார், ஓலையில் கடிகாரம் செய்யும் யோசனை வந்தது.

பனை ஓலை கடிகாரத்தை அரசு கண்காட்சிகளில் வைத்தபோது ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் நெல்லையை அடுத்த தருவையில் நடந்த தேசிய பனை திருவிழாவில் பனை கடிகாரங்களை காட்சிப்படுத்தி இருந்தோம். அவற்றை பார்வையிட்டு வியந்த தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உடனே அதற்குரிய பணத்தை உதவியாளர் மூலம் வழங்கி வாங்கினார். நெல்லையில் தயாரான பனை கடிகாரம், தெலுங்கானா கவர்னர் மாளிகையை அலங்கரிக்கிறது. இந்த கடிகாரத்தை வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது'' என்பவர் கொண்டா நகரத்தை கைவினை கிராமமாக உருவாக்குவதே எங்களது நோக்கம் என்றும் சொல்கிறார்.

''இதற்காகவே நானும், என்னுடைய மனைவி கிரிஜாவும் வங்கி பணியை விட்டு விட்டு, முழு நேரமாக பனை அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இயற்கையை நேசித்து செயல்பட்டு வருகிறோம். தற்போது அனைத்து கடிகாரங்களும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டே செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பனை நார், ஓலையில் கடிகாரத்தை தயாரித்து வருகிறோம். ஒரு கடிகாரம் ரூ.800 முதல் ரூ.1,200 வரை விற்கப்படுகிறது. ஆன்லைனில் அதிகமானோர் ஆர்டர் கொடுக்கின்றனர். அவர்களுக்கு தயார் செய்து அனுப்புகிறோம்'' என்பவர் பனை பொருட்களில் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்குவதற்கு பயிற்சியும் அளிக்கிறார்.

''பனை ஓலையை கொண்டு கல்யாண பெட்டிகள், இனிப்பு பெட்டிகள், கல்யாண மாலை உள்ளிட்டவையும் செய்கிறோம். பனை ஓலையில் கல்யாண மாலை தயாரிக்க பயிற்சியும் அளிக்கிறோம். மேலும் வீடுகளின் உள் அலங்காரமாக பனை பொருட்கள், வாழைநார் கொண்டு பலவித கலைப்பொருட்களை செய்து கொடுக்கிறோம். பனையும், வாழையும் நம்மிடம் அதிகமாக உள்ளது. இவற்றை கொண்டு அதிக பொருட்களை தயாரித்து பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

பனை ஓலை கடிகாரம் வீடுகள்தோறும் இடம் பெற வேண்டும். ரெயில் நிலையங்களில் 'ஒரு பொருள் ஒரு நிலையம்' என்று கூறுகிறார்கள். அங்கு இது போன்று கைவினை பொருட்கள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். பனை பொருட்களின் விற்பனைக்கு தமிழக அரசு மேலும் ஊக்கம் அளிக்க வேண்டும்'' என்ற வேண்டுகோளுடன் விடை பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்