இளம் 'சைக்கிளிங்' சாம்பியன்..!
மிருதுளா கோபு, சைக்கிளிங் மீது பேரார்வம் கொண்டிருக்கிறார். இளம் வயதிலேயே, நெடுந்தூர சைக்கிளிங் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கும் மிருதுளாவுடன் சிறு நேர்காணல்...;
* உங்களை பற்றி சிறு அறிமுகம் கூறுங்கள்?
நான் மிருதுளா கோபு. சென்னை குன்றத்தூர் அருகே இருக்கும் இரண்டாம் கட்டளை பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டங்களை தெரிந்து கொள்ள ஆசை என்பதால், சட்டம் 2-ம் ஆண்டு பயின்று வருகிறேன்.
* சைக்கிளிங் ஆர்வம், வந்தது எப்போது?
சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவேன் என்றாலும், 10-ம் வகுப்பு படித்தபோதுதான் சைக்கிளிங் மீதான ஆர்வம் அதிகரித்தது. அந்த சமயம், நானும் என்னுடைய சகோதரரும் விளையாட்டாக சைக்கிள் ஓட்டத்தொடங்கி, அனகாபுத்தூர் பகுதியில் இருந்து சென்னை மெரினா கடற்கரை வரை சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினோம். கிட்டத்தட்ட 50 கி.மீ. தொலைவிலான அந்த பயணம் என்னுடைய சகோதரருக்கு கடினமாக இருந்த நிலையில், எனக்கு மிகவும் சுலபமாக முடிந்தது. அதுதான், சைக்கிளிங் பயணத்தின் 'என்ட்ரி டிக்கெட்'டாக அமைந்தது.
* சைக்கிளிங் பயணத்தில் முழுமூச்சாக இறங்கியது எப்போது?
12-ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்த பிறகுதான், சைக்கிளிங் பயணங்களை முழுமூச்சாக முன்னெடுத்தேன். சைக்கிள் பயண அனுபவங்கள், சைக்கிளிங் குழுக்கள், சைக்கிளிங் போட்டிகள்... இவைகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தேடி, தெரிந்து கொண்டு சைக்கிளிங் பயணங்களுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான், டபிள்யூ.சி.சி. என்ற சைக்கிளிங் குழுவினருடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களோடு, சிறுசிறு சைக்கிள் பயணங்களை முன்னெடுக்க தொடங்கி, இன்று பல்வேறு சைக்கிளிங் சாதனைகளை படைத்திருக்கிறேன்.
* சைக்கிளிங் பயணங்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. அதில் நீங்கள் எதை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?
பி.ஆர்.எம். எனப்படும் நீண்ட தூர சைக்கிளிங் பயணங்களைத்தான், நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதில் 200 கிலோ மீட்டர், 300 கி.மீ., 400 கி.மீ., 600 கி.மீ. மற்றும் 1000 கி.மீ. என பல்வேறு பயண தொலைவை, குறிப்பிட்ட மாதக்கணக்கிற்குள் பயணித்து முடிக்க வேண்டும். இந்த பி.ஆர்.எம். பயணங்களைத்தான் முன்னெடுத்திருக்கிறேன்.
* என்னென்ன பயணங்களை முடித்திருக்கிறீர்கள்?
200 கி.மீ., 300 கி.மீ., 400 கி.மீ., 600 கி.மீ. ஆகிய பயணங்களை 19 வயதிற்குள்ளாகவே முடித்து, இந்தியாவின் 'இளம் வயது சூப்பர் ரான்ட்னர்' என்ற பெருமையை பெற்றிருக்கிறேன். இதில், 200 கி.மீ., 300 கி.மீ., மற்றும் 400 கி.மீ. பயணங்களை 18 வயதிற்குள்ளாகவே முடித்துவிட்டேன்.
* நெடுந்தூர சைக்கிள் பயணங்களை முன்னெடுத்தபோது, எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?
பொதுவாக, சைக்கிளிங் செய்யும் பெண்களுக்கு ஆண்களை விட சவால்கள் அதிகம். ஏனெனில், 20 மணிநேரம், 30 மணிநேரம்... என தொடர்ச்சியாக பயணிக்கவேண்டும் என்பதால், சாலைகளில் இருக்கும் பெட்ரோல் பங்குகளைதான் பெரிதும் நம்பி இருப்போம். அங்குதான் உணவு, உறக்கம் என எல்லாமே நடக்கும். அவை பாதுகாப்பில்லாத அல்லது பராமரிப்பு இல்லாதவையாக இருக்கும் பட்சத்தில், சிரமமாக இருக்கும்.
* சமீபத்தில் 600 கி.மீ. தொலைத்தூர பயணத்தை வெற்றிகரமாக முடித்தீர்கள். அதில் ஏதாவது சுவாரசிய அனுபவம் உண்டா?
இருக்கிறது. திருச்சியில் இருந்து தனுஷ்கோடியின் அரிச்சல் முனை வரை சென்று மீண்டும் திருச்சிக்கு திரும்ப வேண்டும். இதுதான், 600 கி.மீ. நெடுந்தூர பயணத்தின் திட்டம். எல்லா பயணங்களிலும், என்னுடன் நண்பர்கள் பயணிப்பார்கள். ஆனால் இந்த பயணம், எதிர்பாராதவிதமாக தனிமை பயணமாகிவிட்டது. இருப்பினும், என்னுடைய பயணத்தை தொடங்கி, ராமேஸ்வரம் வரை விரைவாக சென்றுவிட்டேன். ஆனால் அங்கிருந்து அரிச்சல்முனை வரையிலான பகுதியை எட்டுவது, மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனெனில் சாலைகளின் இருபுறமும் கடற்கரை என்பதால், காற்று சைக்கிளிங் பயணத்தை சிரமமாக்கிவிட்டது. அந்த 18 கி.மீ. தொலைவை, கடக்க கிட்டத்தட்ட 2 மணிநேரமாகிவிட்டது.
* உங்களுடைய தனித்துவம் என்ன?
சைக்கிள் பயண இலக்கை, முன் கூட்டியே முடிப்பது என்னுடைய தனித்துவம். எல்லா பயணங்களையும் ஒரு மணிநேரம், இரு மணிநேரங்களுக்கு முன்பாகவே முடித்துவிடுவேன். கடினமாக இருந்த ராமேஸ்வர பயணத்தைக்கூட, 15 நிமிடங்கள் முன்பாகவே முடித்துவிட்டேன்.
* இளம் வயதிலேயே சைக்கிள் பயணங்களில் பல சாதனைகள் படைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளை பற்றி?
சைக்கிளிங் பயணங்களை விரும்பும் நடிகர் ஆர்யா, என்னை பற்றி கேள்விப்பட்டு, என்னை வாழ்த்தினார். குறிப்பாக, இளம்வயதிலேயே, பி.ஆர்.எம். சைக்கிளிங் பயணங்களில் பங்கெடுத்து வருவதை, வெகுவாக பாராட்டினார்.
* உங்களுடைய ஆசை என்ன?
பி.ஆர்.எம். சைக்கிளிங் பயணங்களை தொடர்ந்து, 1200 கி.மீ. தொலைவு கொண்ட எல்.ஆர்.எம். பயணங்களை முன்னெடுத்து, அதை இளம்வயதிலேயே நிறைவு செய்வதை என்னுடைய லட்சியமாக கொண்டிருக்கிறேன்.