சோப்புகள் மூலம் வாழ்க்கையை அழகாக்கியவர்...!

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவரான இவர், இப்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடி, பல்வேறு சமூக முயற்சிகளில் களம் கண்டிருக்கிறார் அனிதா.

Update: 2023-04-09 08:59 GMT

நான் உருவாக்கும் சோப்புகள், மற்றவர்களை உடல் அளவில் அழகாக்குகிறது என்பதோடு மட்டுமல்லாமல் நிறைய மக்களின் மனதையும், வாழ்க்கையையும் அழகாக்குவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்

''பிறருக்கு உதவ நினைத்தால், எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு கஷ்டத்திலும் உதவலாம்'' என்பதை நிரூபித்திருக்கிறார், அனிதா. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவரான இவர், இப்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடி, பல்வேறு சமூக முயற்சிகளில் களம் கண்டிருக்கிறார்.

''எனக்கு சிறுவயதில் இருந்தே, இருவேறு ஆசைகள் இருந்தன. அதில் ஒன்று, ஏதாவது ஒரு துறையில் சாதிக்கவேண்டும். மற்றொன்று, என்னுடைய சொந்த உழைப்பினால், ஏழை-எளிய மக்களுக்கு உதவ வேண்டும். இவ்விரு ஆசைகளையும் நிறைவேற்றும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது'' என்று பொறுப்பாக பேச ஆரம்பிக்கும் அனிதா, அலுவலக நேரம் போக மீதமிருக்கும் ஓய்வு நேரங்களில், சுயமாகவே சோப்பு தயாரிக்க கற்றுக்கொண்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு யூ-டியூப் வீடியோக்கள் வழிவகுக்க, இப்போது பல்வேறு விதமான ஹோம்மேட் சோப்புகளை வீட்டு சமையல் அறையிலேயே தயாரிக்கிறார். இவற்றை விற்று பணம் சேமிப்பவர், அதை பயனுள்ள வழிகளில் பயன்படுத்துகிறார். குறிப்பாக அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்க, உதவி செய்வதுடன் பல தொண்டு நிறுவனங்களுக்கு, இலவசமாகவும் சோப்புகளை தயாரித்து வழங்குகிறார்.

''வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும்.... ஹோம்மேட் சோப்பு தயாரிப்பில் ஒன்றிணைத்தன. யூ-டியூப் மூலமாக, என் வாழ்க்கைக்குள் நுழைந்த ஹோம்மேட் சோப்புகளை, நாமும் ஏன் செய்து பார்க்கக்கூடாது என்ற யோசனையில்தான், செய்ய தொடங்கினேன். வீட்டிலேயே இருக்கும் பழங்கள், காய்கறிகளை கொண்டு மிகவும் எளிய முறையில், எந்தவிதமான பிரத்யேக உபகரணங்களும் இன்றி சோப்பு தயாரிக்க முடியும் என்பதால், வீட்டு சமையல் அறையிலேயே சிறுசிறு பாத்திரங்களை கொண்டு முயன்று பார்த்தேன். எதிர்பார்த்ததைவிட சிறப்பான சோப்புகள் கிடைத்தன'' என்றவர், கைவந்த கலையாக மாறிப்போன சோப்பு தயாரிப்பில் சில புதுமைகளை புகுத்த தொடங்கினார்.

ஆம்..! காய்கறிகள், பழங்கள், மூலிகைப் பொருட்களுடன் சருமத்திற்கு பொலிவு தரும் ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் ஆகியவற்றையும் சேர்த்து புதுமையான ஆர்கானிக் சோப்புகளையும் தயாரித்து, அந்த சோப்புகளை நல்ல காரியங்களுக்காக விற்க தொடங்கினார்.

''சோப் தயாரிக்க கற்றுக்கொண்டதே, அதை நல்ல முறையில் பயன்படுத்தத்தான். ஆம்..! பிறருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, இந்த ஆர்கானிக் சோப்புகளை விற்க தொடங்கினேன்.

ரெட் ஒயின், தேன், நிலக்கரி... என புதுமையான பொருட்களில் ஹோம்மேட் முறையில் சோப்பு தயாராகி இருந்ததும், என்னுடைய விற்பனையின் நோக்கமும்... பலரையும் வெகுவாக கவர்ந்தது. அதனால் நண்பர்கள், தோழிகள், அக்கம் பக்கத்து வீட்டினர், மெட்ரோ ரெயில் பயணிகள், சக ஊழியர்கள்... என நிறைய நல் உள்ளங்கள், எனக்கு ஆதரவு கொடுத்தனர்'' என்றவர், சோப்பு மூலமாக கிடைக்கும் லாப பணத்தை, வாழ்க்கையை நகர்த்த சிரமப்படும் ஏழை-எளிய மக்களுக்கும், பெற்றோர் இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கும் செலவு செய்கிறார்.

''நான் உருவாக்கும் சோப்புகள், மற்றவர்களை உடல் அளவில் அழகாக்குகிறது என்பதோடு மட்டுமல்லாமல் நிறைய மக்களின் மனதையும், வாழ்க்கையையும் அழகாக்குவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். பகுதி நேர பணியாக தொடங்கிய சோப்பு தயாரிப்பு, பலருக்கும் உதவ வழிகாட்டி இருக்கிறது.

பண உதவி என்பதை விட, பொருள் உதவி தேவைப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். குறிப்பாக, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது அதீத கவனம் செலுத்துகிறேன். இத்தகைய ஆக்கப்பூர்வமான முயற்சிகளால் என்னுடைய வாழ்க்கையும், அழகாகி இருப்பதாக உணர்கிறேன்'' என்று மனம் பூரிக்கும் அனிதா, தனக்கு உறுதுணையாக இருக்கும் அம்மாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மகனுக்கும் நன்றி தெரிவிக்கிறார். இவரது முயற்சி, பல சமயங்களில் குடும்ப சூழலை சமாளிக்கவும் உதவியிருக்கிறது.

''எல்லா பெண்களுக்கும், ஒரு கனவு அல்லது ஒரு ஆசை இருக்கும். ஆனால் அவை பெரும்பாலும் நிறைவேறாத ஆசைகளாகவே இருக்கும். எனக்கும், ஆரம்பத்தில் அப்படிதான் தோன்றின. ஆனால் நம்முடைய சிறு முயற்சி, நம்முடைய கனவுகளை நினைவாக்க, ஆசைகளை எட்ட பாதை வகுத்து கொடுக்கும். அந்த பாதையில் பயணிப்பது, ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும்'' என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்