பல துறைகளில் களமாடும் 'மங்கை'..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த திருமங்கை ஆண்டவர், பல்வேறு தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக, மலைவாழ் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறார். அதுபற்றி, திருமங்கை யுடன் சிறு நேர்காணல்...;
நான் எம்.எஸ்சி பேஷன் டெக்னாலஜி படித்திருக்கிறேன். பேஷன்துறை படிப்பின்போதே, அந்த துறை சம்பந்தமான சிறுசிறு கைத்தொழில் முயற்சிகளை (டெடி பியர் உருவாக்கம்) முன்னெடுத்திருக்கிறேன். சில காலம் தொலைகாட்சி வீடியோ ஜாக்கியாக பணிபுரிந்திருக்கிறேன். பல பேஷன் நிறுவனங்களில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு, சொந்தமாகவே 'பொட்டிக்' தொடங்கி இருக்கிறேன். இப்போது கல்வி சம்பந்தமான சமூக பணிகளில் மும்முரம் காட்டுகிறேன்.
என்னென்ன சமூக பணிகளை முன்னெடுத்து செல்கிறீர்கள்?
பேஷன் மற்றும் கைவினை கலையில் எனக்கு அதீத ஆர்வம் இருப்பதாலும், அதையே கைத்தொழில் பயிற்சியாக கற்றுக்கொடுக்கிறேன். குறிப்பாக, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, அங்கிருக்கும் பள்ளிப்பருவ குழந்தைகளுக்கு, கைத்தொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறேன். கல்வி அவர்களை வளர்த்தெடுத்தாலும், சமூகத்தில் அவர்கள் வாழ்க்கை நடத்த இந்த கைத்தொழில்கள் உதவியாக இருக்கும். அதனால்தான் இந்த முயற்சி.
வேறு என்ன செய்கிறீர்கள்?
மலைவாழ் மக்களோடு பழக ஆரம்பித்த பிறகு, இயற்கையை உயிர்ப்பிக்கும் ஆசையும் வந்துவிட்டது. அதனால் மலைவாழ் குழந்தைகள் மற்றும் பள்ளிக்குழந்தைகளின் உதவியுடன் 3 மாதங்களுக்கு ஒருமுறை விதைப்பந்துகளை உருவாக்கி, பல்வேறு இடங்களில் வீசி வருகிறோம். மேலும் சமூகத்தில் பின்தங்கிய குடும்ப பெண்களுக்கு என, பிரத்யேக பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறேன். இதில் எளிமையான, கைவினை கலைகள் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பதுடன், வாழ்க்கையை பொருளாதார ரீதியில் ஆரோக்கியமாக நகர்த்தி செல்லவும் உதவும்.
கைவினை பயிற்சிகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா?
பொதுவாக பெண்களுக்கு, அவர்களது குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் உண்டு. அதில் பொருளாதார சிக்கல்களும் அதிகம் இருக்கும். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கணவரின் அடக்குமுறைகளை மீறி... தனி ஒருத்தியாக சமூகத்தில் ஜெயித்திடும் எண்ணத்தில் நிறைய பெண்கள் உண்டு. அவர்கள் ஆர்ட் அண்ட் கிராப்ட் பயிற்சி பெறுகிறார்கள். கூடவே, பேஷன் துறைக்கு சம்பந்தமான சிறுசிறு கைத்தொழில் பயிற்சியும் பெறுகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பள்ளிக்குழந்தைகள்... என நிறைய பேர் தொழில்பயிற்சி பெறுகிறார்கள்.
புதுமையான முயற்சிகளில் களம் காண்கிறீர்களா?
ஆம்..! ஒருநாள் விவசாயி என்ற கனவு திட்டத்திற்கு உயிர்கொடுக்க ஆவலாக இருக்கிறேன். அதாவது, நகரங்களில் வாழ்பவர்களுக்கு விளைநிலங்கள் மற்றும் விவசாயத்தின் அருமை பெருமைகளை புகட்டும் விதமாக, அவர்களை ஒருநாள் விவசாயியாக மாற்றி, அவர்களுக்கு புது அனுபவம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன். இது நகரவாசிகளுக்கு புதுமையான படிப்பினையை கொடுப்பதுடன், விவசாயிகளுக்கு ஒருநாள் ஓய்வையும் கொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாய அறிவை எதிர்கால சந்ததியினருக்கு கடத்த உதவும். இதற்கான திட்டமிடுதல் பணிகள் முழுமை பெற்றுவிட்ட நிலையில், அதை செயல்படுத்தும் உரிய காலத்தை எதிர்நோக்கி வருகிறேன்.
நிறைய தளங்களில் பணியாற்றுகிறீர்கள். கடினமான இருக்கிறதா?
பெண்களுக்கு இயல்பாகவே ஒரு பண்பு உண்டு. அது எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருப்பினும், அதை எதிர்கொண்டு, அதில் வெற்றி பெறுவது. அந்த பண்புதான், என்னையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. இதன் காரணமாகவே, நிறைய அமைப்புகளிடம் இருந்து 'சிங்கப்பெண்ணே' விருது எனக்கு கிடைத்திருக்கிறது.
உங்களுடைய இலக்கு என்ன?
என்னால் முடிந்த படிப்பினைகளை வழங்கி, பெண்களை கவலையின்றி வாழச்செய்வதும், சமூகத்தில் தலைநிமிர்ந்து நடைபோட வைப்பதுவுமே என்னுடைய இலக்கு. அதைநோக்கியே பயணித்து வருகிறேன்.