அடிமுறை கலையை உலகெங்கும் பிரபலப்படுத்தும் இளைஞர்..!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவரான வைகுண்ட ராஜா அடிமுறை கலையை உலகமெங்கும் பிரபலப்படுத்தி வருகிறார்.;

Update:2023-05-14 20:30 IST

சமீப காலமாக, டிரெண்டிங்கில் இருக்கும் தற்காப்புக்கலை, அடிமுறை. இது தமிழர்களின் பழங்கால போர்க்கலை என்பதும், கராத்தே, குங்பூ... போன்ற மற்ற தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடி என்பதும், இதன் புகழை வானுயர்த்தி உள்ளது. அதேபோல, ஒருசில 'ஆசான்'களின் முயற்சியினாலும், இந்த கலை உலகளவில் பிரபலமாகிறது. அந்த ஆசான்கள் பட்டியலில், மிக முக்கிய இடத்தை பெறுகிறார், வைகுண்ட ராஜா.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவரான இவர் அடிமுறை கலையை உலகமெங்கும் பிரபலப்படுத்தி வருகிறார். குறிப்பாக கத்தாரில் இருந்தபடியே, வளைகுடா நாடுகள் முழுவதிலும் அடிமுறை கலையை பிரபலப்படுத்தி, நம் தமிழர் தற்காப்புக் கலைக்கு உலக அங்கீகாரம் பெற்று தந்திருக்கிறார். இவரது முயற்சியினால், 20-க்கும் மேற்பட்ட நாடுகளில், அடிமுறை பயிற்சி களம் உருவாகி இருக்கிறது. அடிமுறை மட்டுமின்றி தொடுமுறை, வர்மம்... என பழந்தமிழர்களின் மருத்துவ முறைகளையும் மீட்டெடுத்து வருகிறார்.

அவரிடம் சிறு நேர்காணல்....

அடிமுறையின் அடிப்படை என்ன?

சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, களரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமே நாட்டு அடிமுறை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மனின் தளபதி அனந்த பத்மநாபன் இந்த தற்காப்புக் கலையை பிரபலப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்த கலையில் எதிராளியை கையாலும் காலாலும் தாக்கி வீழ்த்துவர். ஆயுதம் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள, அடிமுறை உதவும்.

அடிமுறை உங்களுக்கு எப்படி பழக்கமானது?

'அடி பயின்றால், அது நாட்டு அடியாகத்தான் இருக்கவேண்டும்' என்ற சொல்லாடல், கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உண்டு. அப்படிதான் நானும், சிறுவயதிலேயே தற்காப்பு கலை பயில ஆசைப்பட்டேன்.

அதுவும் நம் 'நாட்டு அடி'யான அடிமுறை பயில தொடங்கினேன். இடைவிடாத பயிற்சியின் காரணமாய், அடிமுறை கலையை சிறப்பாக கற்றுக்கொண்டேன்.

'அடிமுறை' கலையில் முழுமையாக ஐக்கியமானது எப்போது?

அடிமுறை பயிற்சி பெற்ற நண்பர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து, நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். லெமோரியா பெயரில் யூ-டியூப் சேனல்களும் தொடங்கி, அதன்மூலம் அடிமுறையை செய்து காண்பித்தோம். நிறைய மக்களின் ஆதரவு கிடைக்கவே, அதனோடு ஐக்கியமாகிவிட்டோம். இப்போது, என்னுடன் அடிமுறை பயின்ற நண்பர்கள், துணையாக இருக்கிறார்கள். அவர்களை கொண்டு கன்னியாகுமரியிலும், ஆன்லைன் முறையில் உலக மக்களுக்கும் அடிமுறையை கற்றுக்கொடுக்கிறோம்.

அடிமுறை கலையை நிறைய ஆசான்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் உங்களுக்குமான வித்தியாசம் என்ன?

அடிமுறை கலையின் பிறப்பிடம் 'குமரி' என்பதால், குமரியில் பிறந்து வளர்ந்து அடிமுறை பயின்ற ஆசான்களின் பயிற்சியும், உடல் அசைவும் தனித்துவமாக இருக்கும். அதுவே மற்றவர்களுக்கும், எனக்குமான மிகப்பெரிய வித்தியாசம்.

அடிமுறையில் என்னென்ன நிலைகள் இருக்கின்றன?, நீங்கள் என்ன நிலையை கடந்திருக்கிறீர்கள்?

மழலை வீரன், வீரன், மாவீரன், இளமல்லன், மல்லன், மாமல்லன், சூரன், அசூரன், ஈஸ்வரன், ராவணன், ராஜராஜன், பரணி வீரன், களரி வீரன், பரந்தலை வீரன், முதுநில வீரன், அருகன், மூதன், ஆசான், அகத்தியர், திருமூலர், சித்தர் இப்படி பல நிலைகள் உண்டு. 21 நாட்கள் தொடங்கி 90 நாட்கள் வரை, அடிமுறையின் நிலைக்கு ஏற்ப, பயிற்சி காலம் மாறுபடும். ஆசான் வரை பயிற்சி பெறலாம். அதற்கு மேல் இருக்கும் அகத்தியர்-திருமூலர்-சித்தர் இவை மூன்றுமே ஆராய்ச்சி நிலைகள். வர்மம், அதுதொடர்பான வைத்தியம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிலைகள் இவை. அந்தவகையில் நான் ஆசான் நிலையை கடந்து, இப்போது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

அடிமுறையை யாரெல்லாம் கற்கலாம்?

சொல்வதை புரிந்துகொள்ளக்கூடிய திறமை இருக்கும் 4 வயது குழந்தை தொடங்கி, வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் கற்கலாம். இருப்பினும் 12 முதல் 25 வயதில் பழகும்போது, வேகமாக கற்றுக்கொள்ளலாம். நிறைய பேர் அடிமுறை கற்கிறார்கள்.

உங்களுடைய தனித்துவம் என்ன?

அடிமுறையை மையப்படுத்தி, உலக கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். இதில் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா, தைவான், தாய்லாந்து, வளைகுடா நாடுகள் உள்பட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்கு அடிமுறை பற்றிய விழிப்புணர்வும், வீடியோ கான்பிரன்சிங் முறையில் 'அடிமுறை' பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும் கராத்தே கலையின் தலைமையிடமாக கருதப்படும் 'சாவ்லின் டெம்பிள்'-ஐ போலவே, தமிழர் கலையான அடிமுறை, வர்மம், சிலம்பம், எடுத்துருவி, மல்லர் கம்பம் என எல்லாவற்றையும் பயிலும், பிரத்யேக பயிற்சி களத்தினை உருவாக்கி வருகிறோம். தாய்களம் என பெயர் சூட்டப்பட்டு, அதற்கான வேலைகள் நடைபெற்றுவருகிறது. 2 ஆண்டுகளில், உலக நாடுகளை சேர்ந்த பலரும், நம் தாய் களத்தில் நம்முடைய பழங்கால தற்காப்புக் கலைகளை பயில்வார்கள்.

சாதனை முயற்சிகளில் ஈடுபட்டது உண்டா?

27 நாடுகளில் வாழும் 1200 அடிமுறை கலைஞர்களை இணையம் வழியாக ஒருங்கிணைத்து, 12 மணி நேரம் தொடர்ச்சியாக அடிமுறை பயிற்சிகள் செய்து சாதனை நிகழ்த்தினோம். அதேபோல, தெலுங்கானா மாநிலத்தில், பள்ளி மாணவிகளுக்கு 'அடிமுறை' தற்காப்பு கலையை கற்றுக்கொடுத்து, அவர்களில் சிறந்த 1,500 மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்களை ஒரே மைதானத்தில் ஒருங்கிணைத்து, அடிமுறை கலையை நிகழ்த்தி காட்டச்செய்து சாதனை படைத்தோம்.

இனி வருங்காலங்களில் அடிமுறையை மையப்படுத்தி டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மேலும் ஒரு லட்சம் மாணவர்களை கொண்டு அடிமுறையை நிகழ்த்திக் காட்டி, கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறோம்.

மற்ற தற்காப்புக் கலைக்கும், அடிமுறைக்கும் என்ன வித்தியாசம்?

மற்ற தற்காப்புக் கலைகள், உடலை இரும்பு போல வலிமையாக்கும். ஆனால் அடிமுறை, உடலை லேசாக வைத்திருக்கும். 'ஸ்பிரிங்' போல அங்கும் இங்கும் அசைந்து, துள்ளிக்குதிக்கச் செய்யும். இது தற்காப்புக் கலை என்பதைத் தாண்டி, சிறந்த உடற்பயிற்சியும்கூட. குறிப்பாக குடும்ப பெண்களுக்கு ஏற்ற, ஆரோக்கிய பயிற்சி இது.

Tags:    

மேலும் செய்திகள்