ஏழைப்பெண்களை தொழில்முனைவோராக மாற்றுபவர்...!

தனக்குத் தெரிந்த கைத்தொழிலை ஏழை-எளிய பெண்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றுகிறார், கலைச்செல்வி.

Update: 2023-10-07 09:05 GMT

 சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவரான இவர், ஏழ்மையான பின்னணியிலிருந்து முன்னுக்கு வந்தவர். வீட்டைச் சுத்தமாக, சுகாதாரமாகப் பராமரிக்கும் 'ஹவுஸ் கீப்பிங்' பொருட்களைத் தயாரிக்க கற்றுக்கொண்டு, அதை தொழிலாக முன்னெடுத்து இன்று அரசு அலுவலகங்கள் வரை கொண்டு சேர்த்திருக்கிறார். மேலும், தனக்கு தெரிந்த இந்த கைத்தொழிலை, மற்றவர்களுக்கும் இலவசமாகக் கற்றுக்கொடுக்கிறார். கடந்த 34 வருடங்களாக, தொடர்ந்து வரும் இந்த சேவை பற்றி, கலைச்செல்வி பகிர்ந்து கொண்டவை...

''இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாட்டில், வீட்டுப் பராமரிப்பு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுதான், இன்று பல பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறது. நானும், அப்படித்தான் வீட்டுப்பராமரிப்பு பொருள் தயாரிப்பைக் கற்றுக்கொண்டேன். சின்ன முதலீட்டில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருந்ததால், இன்று வரை தொடர்கிறேன்'' என்றவர், சிறுதொழிலாக முன்னெடுத்து இன்று, அரசு அலுவலகங்களுக்காக 'ஹவுஸ் கீப்பிங்' பொருட்களைத் தயாரித்து வழங்கும் அளவிற்கு, முன்னேறி இருக்கிறார்.

''ஏழை-எளிய பெண்களின் வாழ்க்கை முன்னேற, சிறுதொழில் மிகவும் அவசியம். அதுவும் வீட்டுப் பராமரிப்பு பொருள் தயாரிப்பு சம்பந்தமானதாக இருந்தால், பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். என் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக அதை உணர்ந்து கொண்டேன். இப்போது, அதை மற்ற ஏழைப் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்'' என்றவர், இதுவரை சென்னையைச் சுற்றியிருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயிற்சி வழங்கி, அவர்களைச் சிறுதொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறார். சிறிய முதலீட்டிற்குக் கூட வசதியில்லாதவர்களுக்கு, தன்னால் முடிந்த தொழில் வளர்ச்சி முயற்சிகளை முன்னெடுக்கிறார்.

''நான் சுயமாகவே பயிற்சி கொடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும், பெண்கள் குழுக்களுடன் இணைந்து, 2 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறேன். பொதுவாக, வீட்டுப்பராமரிப்பு பொருட்களைத் தயாரிக்க, வெறும் 2 நாட்கள் பயிற்சியே போதுமானது. 2 நாட்கள் பயிற்சியிலேயே, ரூம் பிரஷ்னர், லிக்வீட் டிடெர்ஜெண்ட், டிடெர்ஜெண்ட் பவுடர், பினாயில், டிஷ்வாஷர், சானிடைஷர்... இப்படியாக 10 பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக்கொள்ளலாம். அது பல குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்'' என்பவர், தொழில்முனைவோர் வளர்ச்சி பணிகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். சமீபத்தில்கூட, இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

''பெண்களின் ஏழ்மை, அவர்களை தொழிலாளர்களாக மாற்றிவிடுகிறது. சிலர் அடுக்குமாடிகளில் வீட்டு வேலை செய்கிறார்கள். சிலர் ரசாயன நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி, ஏழைப் பெண்களையும் சுய தொழில் செய்யும் தொழில்முனைவோராக மாற்றுவதுதான் என் ஆசை. அந்த பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்'' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்