எம்.எஸ்.டோனி பாராட்டிய தமிழக வீரர்..!

Update:2023-08-05 15:14 IST

ஐ.பி.எல். போட்டிகள் நடந்து முடிந்துவிட்டாலும், எம்.எஸ்.டோனி பற்றிய பேச்சும், சி.எஸ்.கே. அணியின் 5-வது வெற்றி பற்றிய அனுபவ பகிர்தலும் ஓய்ந்தபாடில்லை. சி.எஸ்.கே. அணியோடு தொடர்புடையவர்கள், சி.எஸ்.கே. அணியோடு பயணித்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என... நேர்காணல் பட்டியல் நீண்டு கொண்டே இருக்க, அதில் ஒருவராய் தஞ்சாவூர் இளைஞர் ரிஷி-ஐ சந்தித்து பேசினோம். இவர், சி.எஸ்.கே. அணியின் பயிற்சி ஆட்டங்களில், விக்கெட் கீப்பராக செயல்பட்டவர். அதுமட்டுமல்ல... எம்.எஸ்.டோனியிடம் 'கீப்பிங் கிளவுஸ்' பரிசு பெற்றவர். அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

''தஞ்சாவூரின், மாரியம்மன் கோவில் பகுதியில்தான் பிறந்து வளர்ந்தேன். அங்கு அருண் நெட்ஸ்சில் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக்கொண்டேன். 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை ஓரியண்டல் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி பெற்று, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) உதவியுடன் பிளஸ்-2 முடித்தேன். கூடவே, கிரிக்கெட் விளையாட்டையும் மேம்படுத்திக்கொண்டேன். இந்நிலையில், எஸ்.டி.ஏ.டி. பயிற்சியில், டி.என்.பி.எல். வீரரான அலெக்ஸாண்டர் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரும் ஏழ்மையான பின்னணியில் இருந்து கிரிக்கெட் விளையாட்டிற்குள் வந்தவர் என்பதால், நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார். கூடவே, கிரிக்கெட் ஜாம்பவான்களை சந்திக்கும், அவர்களுடன் பழகும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அந்தவகையில்தான், நான் சி.எஸ்.கே. அணியுடன் 4 நாட்கள் பயணித்தேன்'' என்பவர், தஞ்சை மாவட்ட கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் விளையாடுகிறார். தஞ்சை மாவட்ட 14 வயதிற்குட்ட அணி, 16 வயதிற்குட்ட அணி, 19 வயதிற்குட்ட அணியில் அங்கம் வகித்திருப்பதுடன், சி.எஸ்.கே. வின் பயிற்சி ஆட்டத்தில், முக்கிய வீரர்களுக்கு விக்கெட் கீப்பராக நின்று, கீப்பிங் அனுபவத்தை வளர்த்திருக்கிறார்.

''பிளஸ்-2 முடித்த பிறகு, அலெக்ஸாண்டர் அண்ணாவின் அறிவுறுத்தல்படியே, சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அத்துடன், சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளிலும், பயிற்சிகளிலும் கலந்து கொண்டேன். அப்படி, அலெக்ஸ் அண்ணாவின் மூலமாகவே, சி.எஸ்.கே. அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது விக்கெட் கீப்பராக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. 4 நாட்கள் மட்டுமே கிரிக்கெட் ஜாம்பவான்களோடு பயணித்தேன் என்றாலும் நிறைய அனுபவங்களை பெற்றேன்.

சர்வதேச கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் வீசிய அதிவேக பந்துகளை பிடித்தது, ஸ்விங் வகை பந்துகளை லாவகமாக பிடித்தது, இந்தியாவின் நம்பர்-1 பீல்டரான ஜடேஜாவின் மின்னல் வேக பீல்டிங்கில் பந்தை பிடித்தது... என நிறைய அனுபவங்கள் கிடைத்தது. எம்.எஸ். தோனி, பிரிட்டோரியஸ், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் விளையாடும்போது, அவர்களுக்கு பின்னால் நின்று விக்கெட் கீப்பிங் செய்த அனுபவமும், அலாதியானது.

சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களோடு விளையாடியதையும், அனுபவங்களை உரையாடியதையும், அவர்களோடு நேரம் செலவழித்ததையும் என்னுடைய வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது'' என்று சிலாகிக்கும் ரிஷி, சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ததற்காக, டோனியிடம் பரிசும் பெற்றார்.

''2-வது நாளில் டோனியை சந்தித்தேன். அப்போது என்னுடைய விக்கெட் கீப்பிங் திறமையை பாராட்டினார். கூடவே, ஒரு பரிசு ஒன்று தருவதாகவும் கூறினார். ஆனால் அன்று வெகுவிரைவிலேயே பயிற்சியில் இருந்து கிளம்பிவிட்டார். 3-வது நாள் வலைப்பயிற்சி என்பதால், அவரை பார்க்க முடியவில்லை. அந்த சூழலில், டோனி வழங்குவதாக சொன்ன பரிசு கிடைக்குமா, கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எகிறியது. 4-ம் நாள், அதாவது எங்களது பயிற்சியின் இறுதிநாள். தல டோனி, என்னை பார்த்து, நியாபகம் இருக்கிறது. கிளம்பும்போது, என்னை வந்து பாருங்கள் என்றார். அவர் சொன்னபடியே, அன்று இரவு என்னை அழைத்திருந்தார். சென்று அவரோடு சிலநேரம் பேசினேன். என்னுடைய விக்கெட் கீப்பிங் திறமையை பாராட்டி, ஒரு கீப்பிங் கிளவுஸ் பரிசளித்தார். என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த என்னுடைய சீனியருக்கும், அந்த பரிசு கிடைத்தது. நான் மட்டுமல்ல, கிரிக்கெட் விளையாடும் விக்கெட் கீப்பர்களுக்கு டோனி போல விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படிப்பட்ட கனவுடன் இருந்த எனக்கு, அவரே பாராட்டி பரிசு கொடுத்தது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அவரது ஊக்கம், என்னுடைய கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் என நம்புகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

ரிஷி, ஏழ்மையான பின்னணி கொண்டவர். இருப்பினும் அவரது கிரிக்கெட் ஆசைகளுக்கு, அவரது தந்தை சுந்தர் மற்றும் தாய் வனஜா ஆகியோரும், சீனியர் மற்றும் நண்பர்கள் ஆகியோரும் பக்கபலமாக இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்