சர்வதேச அளவில்... சாதிக்க துடிக்கும் தமிழக 'கிக் பாக்ஸிங்' அணி

Update:2023-08-12 07:11 IST

10 வருடங்களுக்கு முன்பு வரை, 'கிக் பாக்ஸிங்' என்பது தமிழ்நாட்டில் பிரபலமில்லாத விளையாட்டு. ஆனால், இன்று அப்படியில்லை. 'கிக் பாக்ஸிங்' விளையாட்டில், தமிழக வீரர்-வீராங்கனைகளே பட்டைய கிளப்புகிறார்கள். தேசிய அளவிலான போட்டிகளை வென்று, இந்திய கிக் பாக்ஸிங் அணியையும் வழிநடத்துகிறார்கள். இவ்வளவு ஏன்..? 'உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்' போட்டிகளில், நம் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கம் உட்பட பல பதக்கங்களையும் வென்று அசத்துகிறார்கள்.

சமீபத்தில் கூட, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வாகோ இந்தியா சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்-2023 போட்டியில், 14 தங்கம், 18 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்களை வென்று, இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்தனர். இப்படி 10 வருடங்களுக்குள், அபார வளர்ச்சி பெற்று, இன்னும் சில மாதங்களில் போர்ச்சுக்கல் நாட்டில் நடக்க இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தயாராகி வரும் தமிழக கிக் பாக்ஸிங் அணியினரை பயிற்சிக் களத்தில் சந்தித்தோம். வலுவான 'கிக் பாக்ஸிங்' அணி கட்டமைக்கப்பட்டது பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

''குத்துச்சண்டை தெரியும். குத்துச்சண்டையுடன் 'கிக்' விடும் கிக் பாக்ஸிங், நம் இந்தியாவிற்கு கொஞ்சம் புதுமையான விளையாட்டுதான். இருப்பினும், அந்த சூழலிலும் நிறைய வீரர்கள் பயிற்சி பெற தொடங்கினர். தேசிய-சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தனர். அதில் எங்கள் பயிற்சியாளர் சுரேஷ் பாபு, மிக முக்கியமானவர். அவர், 2006-ம் ஆண்டே ஆசிய அளவில் தங்கம் வென்றிருக்கிறார். அவரது முன்னெடுப்பில்தான், இன்று தமிழக கிக் பாக்ஸிங் அணி தயாராகிறது. அவர், தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்திய கிக் பாக்ஸிங் அணிக்கு பயிற்சியாளர்'' என்று அறிமுகம் கொடுக்கிறார், வசீகரன்.

தமிழக கிக் பாக்ஸிங் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வசீகரன், இளம் வயதிலேயே இத்தாலி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். சமீபத்தில் பஞ்சாபில் நடந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் வெண்கலம் வென்றிருக்கிறார்.




 ''சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில், தமிழக அணி 56 வீரர்-வீராங்கனைகளை மட்டுமே அழைத்து சென்று, 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது.

மற்ற மாநில அணிகள் நூற்றுக்கணக்கான வீரர்களுடன் பங்கேற்ற நிலையில், தமிழக அணி 56 போட்டியாளர்களை கொண்டு 3-ம் இடம் பிடித்தது. குறிப்பாக குழு போட்டிகளை, தமிழக அணி சிறப்பாக எதிர்கொண்டது. இதுபோல தேசிய போட்டிகளில், தமிழக அணி எப்போதுமே மற்ற மாநில அணிகளுக்கு மிகவும் சவாலானதாகவே திகழும்'' என கூறும் சரத் ராஜ், பஞ்சாப் போட்டியில் அசாம் ரைபிள் ராணுவ வீரர்களை தோற்கடித்து, 2 தங்கம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கம் வென்று நம் தமிழக அணிக்கு பெருமை சேர்த்தார். இவரை போலவே, ஒவ்வொரு தமிழக வீரர்-வீராங்கனைகளும், தோற்கடிக்கப்படாத போட்டியாளர்களை எதிர்கொண்டு, அவர்களை வென்று வந்திருக்கிறார்கள். ஏனெனில் தமிழக கிக் பாக்ஸிங் அணியில், சர்வதேச தரத்திலான வீரர்-வீராங்கனைகள் அதிகம் என்கிறார், பயிற்சியாளர் சுரேஷ் பாபு.

''உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி, தமிழக அணியினருக்கே அதிகம். வசீகரன், சுப்ரஜா, நீனா, சரத்ராஜ், சிலம்பரசன், ரோஷினி, வினோத் குமார், பார்த்திபன் மற்றும் கோகுல கிருஷ்ணன் ஆகியோர், நவம்பர் மாதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இப்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். இவர்களில், 4 அல்லது 5 பேர் தங்கப்பதக்கம் வெல்வார்கள் என நம்புகிறோம். அதற்கான பயிற்சிகள் ஆரம்பமாகிவிட்டன'' என்று பொறுப்பாக பேசுகிறார் பயிற்சியாளர் சுரேஷ் பாபு.





இவர் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் பொதுச்செயலாளராக மற்றும் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதுடன், வாகோ இந்தியா கிக்பாக்சிங் கூட்ட மைப்பு பயிற்சி குழு தலைவராகவும் செயலாற்றுகிறார். இவர்களது ஏற்பாட்டில், இமாச்சல பிரதேசத்தில் சிறப்பு பயிற்சிகள் ஆரம்பமாக இருக்கின்றன.

''போர்ச்சுக்கல் நாட்டின் சீதோஷண நிலைக்கு ஒத்துபோகக்கூடிய இமாச்சல பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் ஆரம்பமாக இருக்கின்றன. இது நம்முடைய தமிழக வீரர்களுக்கும், போர்ச்சுக்கல் செல்லும் மற்ற இந்திய வீரர்களுக்கும் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக, கிக் பாக்ஸிங் போன்ற விளையாட்டுகளில், பெண்கள் ஒதுங்கியே இருப்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஆம்..! தமிழக அணி நிறைய பெண் திறமைசாலிகளை உருவாக்கி உள்ளது. போர்ச்சுக்கல் செல்லும் அணியிலேயே, மூன்று பெண் வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். ஜூனியர் பிரிவில் நிறைய பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள். இவை அனைத்தும், தமிழக கிக் பாக்ஸிங் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்'' என்றவர், ''கிக் பாக்ஸிங் விளையாட்டில் பாலின பாகுபாடு பார்ப்பதில்லை. எல்லா வீரர்-வீராங்கனைகளையும் சமமாகவே பயிற்றுவிக்கிறோம். ஏனெனில் போர்க்களத்தில் நிற்பது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தாக்குப்பிடிக்கும் வித்தையும், துணிச்சலும், தாக்குதல் யுக்தியும் எல்லோருக்கும் சமமானதே'' என்ற கருத்துடன் பயிற்சி அளிக்க கிளம்பினார், சுரேஷ் பாபு.




 

குறுகிய காலத்திற்குள்ளாகவே, சர்வதேச தரத்தை எட்டியிருக்கும் தமிழக கிக் பாக்ஸிங் அணியினரை, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெகுவாக பாராட்டி, அவர்களுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்