வெளிநாட்டு மண்ணில் கர்லாக் கட்டை சுழற்றும் தமிழச்சி..!

Update:2023-07-01 13:29 IST

பண்டையகால தமிழர்கள் தங்களின் உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் பலவிதமான உடற்பயிற்சி முறைகளை கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒன்றுதான் கர்லாக் கட்டையை கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி முறையாகும். தமிழர்களின் பழமையான இந்த உடற்பயிற்சி முறையை நம்மில் பெரும்பாலானோர் தற்போது மறந்துவிட்ட நிலையில், அதனை முறையாக பயின்று, சான்றிதழும் பெற்று தற்போது இதை அமீரகம் வரை கொண்டு சேர்த்து, மற்றவர்களுக்கும் பயிற்றுவித்து வருகிறார், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியதர்ஷினி.

கர்லாக் கட்டையுடன் பிரியதர்ஷினி

அபுதாபியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் பிரியதர்ஷினி, தன்னை பற்றியும், கர்லாக் கட்டை பயிற்சி மீது தனக்கு ஆர்வம் வந்தது பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

''நான் மென்பொருள் துறையில் பல வருடம் பணிபுரிந்தேன். அப்போது எனக்கு சில நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தது. அப்படியே விட்டு விட்டால் நடக்கவே முடியாமல் போய் விடும் என்பதால் பலவிதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், எந்த பலனும் இல்லாமல் போனது. அப்போது கர்லாக்கட்டை பயிற்சி பற்றி கேள்விப்பட்டு அதைச் செய்ய தொடங்கினேன். ஆரம்பத்தில் கர்லா பயிற்சி, வலி மிகுந்ததாக தோன்றினாலும் ஒரு மாதத்திற்கு பிறகு வலி நிவாரணியாக மாறியது. அடுத்த சில மாதங்களிலேயே எல்லா நரம்பு பிரச்சினைகளும் சரியாகத் தொடங்கின. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான், என்னைப்போல நோயினால் கஷ்டப்படுபவர்களுக்கும் இதை நாம் ஏன் சொல்லித் தரக்கூடாது என்ற சிந்தனை என் மனதிற்குள் தோன்றியது'' என்றவர், ஆன்லைன் மூலமாகவே, புதுச்சேரி ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் மெய்பாடம் மற்றும் கர்லாக் கட்டை பயிற்சிகளை முறையாகப் பெற்றார். இவர் கர்லா பயிற்சியின் மகத்துவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

''பண்டைய காலத்தில் போருக்கு செல்வதற்கு முன்பு தங்கள் உடல், மனம், புத்தியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி முறையை பின்பற்றியுள்ளனர். இந்த உடற்பயிற்சியில் பயன்படுத்தப்படும் உபகரணமான கர்லாக் கட்டை, மருத்துவ குணம் பொருந்திய மரத்தினால் செய்யப்படுகிறது. கர்லாக் கட்டை பயிற்சி பற்றி பல கோவில் கல்வெட்டுகளிலும், சிற்பங்களிலும் நம் முன்னோர்களும் குறிப்பிட்டுள்ளனர்'' என்றவர், கர்லாக் கட்டை மூலம் நடக்கும் உடற்பயிற்சிகளை பகிர்ந்து கொள்கிறார்.

கர்லாக் கட்டை வகைகள்

''கர்லாக் கட்டை பயிற்சியை யார் வேண்டுமானாலும் பெறலாம். ஆண்கள்தான் பெற வேண்டும் என்பதில்லை, பெண்களும் பெறலாம். யார் பயன்படுத்த இருக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப கர்லாக் கட்டைகளும் மாறுபடும். இதில் தொப்பைக் கர்லா, புஜக்கர்லா, புடிக்கர்லா, கைக்கர்லா மற்றும் குஸ்திகர்லா என பல வகைகளும் உண்டு. அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்ப கர்லாக் கட்டைகளின் வகைகளும் மாறுபடும்.

கர்லா பயிற்சிகள் செய்வதற்கு முன்பாக, உடலை தயார்படுத்தும் மெய்ப்பாடம் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். மெய்ப்பாடம் என்பது 'வார்ம்-அப்' பயிற்சிகள் போன்றது. இதில் உடலின் தோள் பட்டை, இடுப்பு, கால் பகுதிகள் பக்குவமாகும். அதன் பிறகுதான், கர்லாக் கட்டையை கையில் தூக்கி சுழற்ற வேண்டும். இல்லையென்றால், கர்லா பயிற்சி பலவிதமான உடல் வலிகளை ஏற்படுத்திவிடும்'' என்றவர், கர்லாக் கட்டை உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார்.

''இந்த உடற்பயிற்சி நம் உடல், மனம், புத்தியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட நோய்களை இதன் மூலம் குணப்படுத்தலாம். இந்த பயிற்சியில் 1500 மெய்ப்பாடம் சுற்றுகளும், 64 கர்லாக்கட்டை சுற்றுகளும் உள்ளது. நம், இடது மற்றும் வலது மூளையை பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு சுற்றுகளும் இருக்கும். ஒவ்வொரு சுற்றையும் 108 தடவை செய்யும் போது நமது மூளை, நரம்பு மண்டலம், தசைகள் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்புகளும் வலுப்பெறும்'' என்றவர், இந்தியாவிலேயே இத்தகைய பழம்பெரும் கர்லாக்கட்டை பயிற்சியை பயின்று, சான்றிதழ் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, சர்வதேச கர்லாக் கட்டை விளையாட்டு கூட்டமைப்பால் 2021-ம் ஆண்டுக்கான சத்திரிய விருதும் பெற்றுள்ளார். கூடவே, அபுதாபியில் இருந்து கொண்டு, கர்லா பயிற்சி களை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

''அமீரகத்தில் செட்டிலாகி இருந்தாலும், ஆன்லைன் மூலமாக கர்லா உடற்பயிற்சியை தமிழர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் ஆன்லைன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மெய்ப்பாடம், கர்லாக் கட்டை பயிற்சி அளித்துள்ளேன். அதில் 200-க்கும் மேற்பட்டோர் தங்களின் நாள்பட்ட நோய்க்கு தீர்வு கண்டு இப்போது ஆரோக்கியமான வாழ்வை வாழ்கின்றனர்'' என்றவர், வெளிநாட்டு மோகத்தால் நம்முடைய பாரம்பரிய உடற்பயிற்சிகளை மறந்துவிட வேண்டாம் என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.

கர்லா பயிற்சியில்....

''இந்தியாவில் கர்லாக் கட்டை பயிற்சியாளர் சான்றிதழ் பெற்ற பெண்கள் மிகவும் குறைவு. அதனால் நிறைய பெண்கள் பயிற்சி பெற முன்வர வேண்டும். கர்லா கலையை மற்றவருக்கும் கற்பிப்பதன் மூலம் நம் பாரம்பரிய உடற்பயிற்சி முறையை இளைய சமுதாயத்தினருக்கு கடத்த முடியும். இதையே, என்னுடைய லட்சியமாக கொண்டிருக்கிறேன். இதில் கிடைக்கும் திருப்தி வேறு எந்த வேலையிலும் எனக்கு கிடைக்கவில்லை.

நம் முன்னோர்கள் நமக்காக பல கலைகளை விட்டுச் சென்றுள்ளனர். நம் மரபிலேயே பல கலைகள் ஒளிந்திருக்க, நாம் ஏன் மாற்று கலைகளை வெளியே தேட வேண்டும். அதனால் நம் பாரம்பரிய கலைகளை முறையாக கற்றுக்கொள்ளுங்கள்'' என்பவர், விரைவில் புதுச்சேரி வந்து சிலம்பம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்.

கர்லாக் கட்டை பயிற்சியை யார் வேண்டுமானாலும் பெறலாம். ஆண்கள்தான் பெற வேண்டும் என்பதில்லை, பெண்களும் பெறலாம். யார் பயன்படுத்த இருக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப கர்லாக் கட்டைகளும் மாறுபடும். இதில் தொப்பைக் கர்லா, புஜக்கர்லா, புடிக்கர்லா, கைக்கர்லா மற்றும் குஸ்திகர்லா என பல வகைகளும் உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்