குழந்தைகளின் குறைகளை தெரிவிக்க தனிக்குழு
குழந்தைகள் குறைகளை தெரிவிக்க விரைவில் கோவையில் தனிக்குழு அமைக்கப்படும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.;
கோவை
குழந்தைகள் குறைகளை தெரிவிக்க விரைவில் கோவையில் தனிக்குழு அமைக்கப்படும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.
திடீர் ஆய்வு
கோவை லட்சுமிமில்ஸ் சிக்னல் அருகே சிறுவர் சீர்த்திருத்த பள்ளி உள்ளது. இங்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களிடம் அங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருந்த பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறோம். இதன்படி கோவையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், சிறுவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு தேசிய ஆணையம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுதவிர கோவை மாவட்ட காவல் துறை புராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு பாராட்டுகள்.
குறைகளை தெரிவிக்க தனிக்குழு
கோவையில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக புகார் வந்துள்ளது. இதுவரை 250 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே கோவை மாவட்டத்தில் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் விரைவில் ஒரு தனிக்குழு அமைக்கப்படும். அந்த குழுவினரிடம் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவித்து கொள்ளலாம்.
தனி செயலி மூலம் கண்காணிப்பு
தமிழக அரசு தேசிய குழந்தைகள் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தருகிறது. தமிழகத்தில் இதுவரை 14 இடத்தில் ஆய்வு செய்து முடித்துள்ளோம். அடுத்ததாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளையும் தனி செயலி (ஆப்) மூலம் கண்காணித்து வருகிறோம். இதன் மூலம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.