திருட்டை தடுக்கும் 'ஸ்மார்ட் வாட்டர்'

Update:2023-07-22 13:45 IST

இதை ஒருவர் மீது ஒருமுறை தெளித்துவிட்டால், அவர் எத்தனை முறை குளித்தாலும் அது போகாது. அந்த நபர் மீது புற ஊதா கதிர்களை (ப்ளாக் யு.வி.) செலுத்திப் பார்த்தால் தெளிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்டர் தெளிவாகத் தெரிந்து விடும்.


திருட்டு, பகல் கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு பணக்கார நாடுகளும் கூட விதிவிலக்கல்ல. ஒரு வீட்டிலோ வங்கியிலோ திருடர்கள் புகுந்துவிட்டால், அங்குள்ள அப்பாவி மக்களின் பாடு திண்டாட்டம் தான். பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருக்கும் அந்த சமூக விரோதி களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதே பெரிது எனும்போது அவர்களை வளைத்துப் பிடிப்பதெல்லாம் ஆகாத காரியம். எல்லோரும் நம் தமிழ் சினிமா ஹீரோக்களைப் போல இருக்க முடியுமா என்ன?

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகத்தான் இங்கிலாந்து நாட்டில் 'ஸ்மார்ட் வாட்டர்' என்ற தண்ணீர் அறிமுகப்படுத்தப்பட்டு, பரவலாக பயன்பட்டும் வருகிறது.

இந்தத் தண்ணீரே நம் உடமைகளையும் பாதுகாக்கும்; திருடனையும் பிடித்துத் தரும் டூ-இன்-ஒன் ஆயுதம் என்கிறார்கள் அந்நாட்டு காவல் துறையினர்.

ஆம், இந்த ஸ்மார்ட் வாட்டரில் இரு வகை உள்ளது.

ஒன்று, நமது பணம், நகை போன்றவற்றில் தெளித்து வைக்க வேண்டிய ஒரு பிரத்யேக ரசாயனம் கலந்த நீர். வீட்டிலோ, வங்கி சேப்டி லாக்கரிலோ வைத்திருக்கும் பணத்திலும் நகையிலும் தெளிக்க வேண்டும். இதனால் கரன்சிக்கோ, நகைக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இதைத் தெளித்த பிறகு நமது பொருள் திருடப்பட்டால், மிச்சம் நம்மிடம் உள்ள நீரை ஆராய்ந்து அதில் பிரத்யேகமாக சேர்க்கப்பட்டுள்ள வேதிப் பொருள் சேர்க்கையைப் பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள்.

அதே வேதிப் பொருள் சேர்க்கை தெளிக்கப்பட்ட ரூபாய் நோட்டோ, தங்கமோ மார்க்கெட்டில் உலாவுவதாக கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது சந்தேகத்தின் பேரில் சோதிக்கப்பட்டால், அப்போது சம்பந்தப்பட்டவர்களையோ அல்லது அவர்கள் கொடுக்கும் தகவல்களை வைத்தோ குற்றவாளிகளை போலீசார் மடக்கிப் பிடித்து விடுவது உறுதி. மேலும் பணம் எண்ணும் இயந்திரத்தில், இந்த வேதிப்பொருளை உள்ளீடாக கொடுத்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதே ஸ்மார்ட் வாட்டரில் இன்னொரு வகை உண்டு.

இது நம்மை மிரட்டி பணம் பறிக்கும் கொள்ளையர்கள் மீது நாம் தெளிக்க வேண்டிய நீர். இதை ஒருவர் மீது ஒருமுறை தெளித்துவிட்டால், அவர் எத்தனை முறை குளித்தாலும் அது போகாது. அந்த நபர் மீது புற ஊதா கதிர்களை (ப்ளாக் யு.வி.) செலுத்திப் பார்த்தால் தெளிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்டர் தெளிவாகத் தெரிந்து விடும். கத்தி முனையில் மிரட்டும் திருடனை அப்படியே நிற்கவைத்து, அவன்மீது இந்தத் தண்ணீரை ஊற்றிக் குளிப்பாட்ட வேண்டும் என்றில்லை. ஒரு வீட்டுக்குள் திருடர்கள் வரும்போதே அவர்கள் மீது இந்த நீரை தாமாகத் தெளிக்கும் தெளிப்பான்கள் இப்போது பொருத்தப்படுகின்றன. இந்த நீர்த்தெளிப்பான் நம் நாட்டிலும் புழக்கத்துக்கு வந்தால், மகிழ்ச்சிதான்.

Tags:    

மேலும் செய்திகள்