புரதச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் 'கடல்பாசி விவசாயம்'
புரதச்சத்து பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு வழி இருக்கிறது. அது கடலில் விவசாயம் செய்வது!;
இன்று உலகில் பல நாடுகளிலும் மக்கள் கவலைப்படும் விஷயங்களில் ஒன்று, புரதச்சத்து பற்றாக்குறை. மனிதனின் இயல்பான வளர்ச்சிக்கு புரதச் சத்து மிகமிக முக்கியம். வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் புரதச் சத்து பற்றாக்குறை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் நிலை இன்னும் மோசம். மக்களிடம் காணப்படும் புரதச் சத்து பற்றாக்குறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கிறது என்கின்றனர் வல்லுனர்கள். எப்படி?
உணவில் புரதச் சத்து குறையும் போது ஒருவரின் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்கிறது மருத்துவ ஆய்வு. இதனால் புரதச் சத்து குறைபாடு உள்ள ஒருவரிடம் சோம்பேறித்தனம் குடிகொள்கிறது. இதனால், உழைப்பும் குறைகிறது. தனிநபர் உழைப்பு குறைவதால், நாட்டின் வருமானமும் பாதிக்கப்படுகிறது என்று புரதச் சத்து குறைபாடு பற்றி புராணம் வாசிக்கின்றனர் விஞ்ஞானிகளும் பொருளாதார மேதைகளும்... இந்த புரதச்சத்து பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு வழி இருக்கிறது. அது கடலில் விவசாயம் செய்வது!
அது சரி... தலைப்புக்கும் இந்த புரதச் சத்து தகவல்களுக்கும் என்ன தொடர்பு என்றுதானே கேட்கிறீர்கள்? இருக்கிறது.
பாசி வகையைச் சேர்ந்த தாவரங்கள் கடலில் நிறையவே வளர்கின்றன. இவை அதிவேகமாக வளரக் கூடியவை. எனவே கடலில் பாசிகளை பயிரிடுவதன் மூலம் புரத உணவுப் பற்றாக்குறைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள்.
இப்படி ஆய்வு செய்து கண்டுபிடித்தது மட்டுமல்ல, அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது அந்நாடு.
முதல்கட்டமாக 2009-ல் ஜப்பான் கடற்கரை பரப்புகளில் 60 ஆயிரம் எக்டேர் பரப்பில் பாசியைப் பயிர் செய்தனர், ஜப்பான் விவசாயிகள். இந்த நுட்பம் வெற்றியைத் தரவே, கடந்த பதிமூன்று ஆண்டுகளில் மட்டும் 1 லட்சம் எக்டேர் பரப்பில் பாசியை பயிர் செய்திருக்கிறார்கள். இந்த நுட்பத்தைப் பார்த்த மற்ற நாடுகள் சும்மா விடுமா?
சீனா, இந்தோனேஷியா மற்றும் அமெரிக்க விவசாயிகளும் இப்போது கடற்கரையில் பாசி விவசாயத்தை கனஜோராக ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு இந்நாட்டு அரசுகளும் நிதி உதவி அளித்து வருகின்றன. ஜப்பான் உள்பட இந்நாடுகளில் பயிர் செய்யும் 'போர்பைரா' எனும் பாசியில், புரதச் சத்து நிறைந்திருப்பதால், உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது அசைவ உணவுக்கு ஒப்பானது என்பதால், இந்நாட்டு தினசரி மெனுக்களில் பாசி உணவும் ஒன்றாகிவிட்டது!
பாசி வகையைச் சேர்ந்த தாவரங்கள் கடலில் நிறையவே வளர்கின்றன. இவை அதிவேகமாக வளரக் கூடியவை. எனவே கடலில் பாசிகளை பயிரிடுவதன் மூலம் புரத உணவுப் பற்றாக்குறைக்கு முடிவு கட்டிவிடலாம்