ரிங்கு சிங்: இளம் நட்சத்திரம்
ஐ.பி.எல். தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அற்புதமாக செயல்பட்டு வரும் ரிங்கு சிங்கை தற்போது கொல்கத்தா அணி நிரந்தர வீரராக மாற்றியுள்ளது.;
25 வயதான ரிங்கு சிங் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ரிங்கு சிங்கின் தந்தை கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதேபோன்று அவரது சகோதரர்கள் இருவரும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார்கள்.
2014-ம் ஆண்டு முதல் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர் சிறு வயதில் துப்புரவு தொழிலாளியாகவும் வேலை பார்த்துள்ளார். 2017-ஆம் ஆண்டு வாக்கில், அவரை பஞ்சாப் அணி 20 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது. பிறகு கொல்கத்தா அணி அவரை 2018-ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக போட்டி போட்டு 80 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
அப்படி இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவ்வப்போது தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாக பயன்படுத்திய அவர், ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் இந்த ஆண்டு தொடர்ச்சியாக விளையாடுகிறார். இப்படி இந்த ஐ.பி.எல். தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அற்புதமாக செயல்பட்டு வரும் அவரை தற்போது கொல்கத்தா அணி நிரந்தர வீரராக மாற்றியுள்ளது.