புட்டு: காலத்தால் அழியாத ருசியான உணவு...!

ஆதிகாலத்து உணவுகளில் பல வழக்கொழிந்து போயிருக்கின்றன. ஆனால் இந்த புட்டு மட்டும் தப்பிப் பிழைத்து புதுப்புது அவதாரம் எடுத்து இன்றும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. புட்டு, ஆதி மனிதனின் உணவு என்பதை அதனை தயார்செய்ய பயன்படுத்தும் பொருட்களை வைத்தே கண்டறிந்துவிடலாம்.;

Update:2023-06-11 14:22 IST

இப்போது புட்டு பாத்திரம் பலவித உலோகங்களில் பளபளப்பாக தயாராகிறது. முந்தைய காலத்தில் கீழே இருக்கும் கலயம் மண்ணில் தயாரிக்கப்பட்டது. அதில் நீர் ஊற்றுவார்கள். அதற்கு மேலே செருகும் குழாய் காட்டில் விளையும் மூங்கிலில் தயாரிக்கப்பட்டிருக்கும். சுத்தம் செய்யப்பட்ட அந்த மூங்கில் குழாய் சூட்டில் வெடித்து போகாமல் இருக்கவும், கையில் பிடிக்கும்போது சூடுதாக்காமல் இருக்கவும், அதன் வெளிப்பகுதியில் தேங்காய் நாரில் தயாரான கயிற்றால் சுற்றிக் கட்டியிருப்பார்கள்.

மூங்கில் புட்டுக் குழாயின் அடிப்பாகத்தின் வழியாக மாவு இறங்கி, கலயத்திற்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக சில்லு என்ற சிறிய இரும்பு சல்லடையை அதில் போட்டுவைப்பார்கள். பிசைந்துவைத்திருக்கும் மாவை மூங்கில் குழாய்க்குள் பூபோல் தூவி, மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு நிரப்பிவிட்டு, அதற்கு மேல் துருவிய தேங்காயை சிறிதளவு கொட்டிவிட்டு மீண்டும் மாவை நிரப்புவார்கள். இப்படியாக புட்டுக் குழாய் நிரம்பிய பின்பு அதன் உச்சியில் தலைப்பாகை கட்டுவது போன்று ஈரத்துணியால் இறுக்க கட்டிவிடுவார்கள். அப்போதுதான் நீராவி வெளியேறாமல் மாவு விரைவாக வேகும்.

அந்த காலத்தில் அடுப்புக்கு விறகுதான் பயன்படுத்தினார்கள். கலயத்திற்குள் இருக்கும் நீர் ஆவியாகி, மேல் நோக்கி எழுந்து சில்லு வழியாக சென்று மாவை வேகவைக்கும். வெந்ததும், குழாயை கலயத்தில் இருந்து இறக்கி தீமூட்டும் குழலால் சில்லு இருக்கும் பக்கத்தின் வழியாக குத்தி, புட்டுவை முறத்தில் தள்ளுவார்கள். அதன் மணம் வீடு முழுக்க பரவும். சுடச்சுட சாப்பிடும் ஆசை தூண்டப்படும். அப்போது அதனுடன் ஜோடி சேர்வதற்காக வீடுகளில் வாழைப்பழ தார் தொங்கிக்கொண்டிருக்கும். புட்டுவை அப்படியே சாப்பிடுகிறவர்களும் உண்டு. வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து சுவைப்பவர்களும் உண்டு. அப்பளமும், அவித்த பயறும் கலந்து ருசித்து மகிழ்கிறவர்களும் உண்டு.

* புட்டு வகைகள்

குழாய் புட்டு, உளுந்தமாவுப் புட்டு, சோயா பீன்ஸ் புட்டு, கொள்ளுப்புட்டு, பாசிப்பருப்பு புட்டு, புழுங்கல் அரிசிப் புட்டு, கருப்பட்டி புட்டு, பிரெட் புட்டு, சேமியா புட்டு, சோளப் புட்டு.. இப்படியே அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். சிக்கன் கீமா புட்டு, மீன் புட்டு போன்று 50-க்கும் மேற்பட்ட அசைவ புட்டு வகைகளும் வழக்கத்தில் உள்ளன. பல வகையான பழங்களைகொண்டும் 25-க்கும் மேற்பட்ட வகை புட்டுகள் தயாராகின்றன. சிறுதானிய வகை புட்டுகளையும் மக்கள் இப்போது விரும்பி சாப்பிடுகிறார்கள்.

* காலை உணவு

இந்திய மக்கள் முழுமையாக விவசாயத்தையே சார்ந்தவர்களாக இருந்ததால், அவர்கள் கடுமையாக உழைக்கவேண்டியதிருந்தது. அவர்களது உழைப்புக்கு தேவையான கலோரியை தரும் உணவாக புட்டு திகழ்ந்தது. காலையில் இரண்டு குழாய் புட்டு சாப்பிட்டால் மதியம் வரை சோர்ந்து போகாமல் வியர்வை வழிய அவர்களால் வேலை செய்யமுடியும். புட்டு, பயறு, பழம், வெல்லம் போன்றவைகள் சேரும்போது அது சமச்சீரான சத்துணவாகவும் அமைந்தது. அதனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை உணவில் புட்டுதான் கதாநாயகனாக இருந்தது. காலப்போக்கில் மக்களின் உடல் உழைப்பு குறைந்தது. புட்டு சாப்பிட்டால் மதியம் பசிப்பதில்லை என்ற குறையோடு மாற்று உணவுகளைத் தேடினார்கள். ஆனாலும் காலமாற்றத்திற்கு ஏற்ப புது ருசிகளில் உருவான புட்டு வகைகள், இப்போதும் புட்டுப் பிரியர்களுக்கு பிரியாவிடை கொடுக்காமல், தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

புட்டின் தாயகம் எது என்ற கேள்விக்கான விடை எளிதில்லை. பிரபலமான இந்திய 'செப்'கள் அது, தமிழகத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் தென்னிந்தியா முழுக்க பிரபலமாகிஇருக்கலாம் என்ற கருத்தினை முன்வைக்கிறார்கள்.

* நட்சத்திர ஓட்டல்

புட்டு என்றால் கொஞ்சம் இளக்காரமாக, அது தட்டுக்கடை ஓட்டல்களில் மட்டுமே பரிமாறப்படும் உணவு என்று கருதிவிடவேண்டாம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் இப்போது ஸ்டார் ஓட்டல்களில் சென்றும் புட்டு சாப்பிட்டு மகிழ்கிறார்கள். அவர்களுக்காக பிரபலமான செப்களும் புதுப்புது புட்டு வகைகளை தயார்செய்து வழங்குகிறார்கள். அந்த வரிசையில் தற்போது கீரை சேர்த்த 'ஸ்பினச் புட்டு', இறால் துவையல் சேர்த்த கருவாட்டு புட்டு போன்றவை புதிதாக இணைந்திருக்கிறது.

* கேரளா

தென்னிந்தியாவில் கேரள மக்கள் வித்தியாசமான ருசிகளில் அதிக அளவில் புட்டு சாப்பிடுகிறார்கள். அங்கு புட்டுக்காக மட்டுமேயான ஓட்டல்கள் நிறைய உள்ளன. அதில் பரவூரில் அமைந்திருக்கும் கே.மோகனன் நாயர் என்பவரது புட்டுக்கடை ரொம்ப பிரபலம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இதனை நடத்திவருகிறார்.

புட்டு பெயர்

வறுத்தெடுத்த அரிசி மாவில் தேவையான உப்பு கலந்த சுடுதண்ணீர் தெளித்து கட்டியாகிவிடாமல் நன்றாக பிசிறிவிடுவார்கள். புட்டுக்காக தயார்செய்யும் மாவை கையால் வருடும்போது மென்மையாக பட்டு போன்று இருக்கும். அதனால்தான் புட்டு என்று பெயர் வைத்துவிட்டார்களோ என்னவோ!

Tags:    

மேலும் செய்திகள்