தேசிய விருது வென்ற 'தேனீ வளர்ப்பாளர்'..!
கடந்த 15 வருடங்களாக, இந்தப் பணியை சிறப்பாக செய்து வரும் ஜினோவிற்கு, தேசிய தேனீ வாரியம் ‘இந்தியாவின் தலைசிறந்த தேனீ வளர்ப்பாளர்’ என்ற விருதினை வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறது.;
தேனீ வளர்ப்பை பலரும் முன்னெடுக்கிறார்கள். ஆனால், நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ஜினோ, தேனீ வளர்ப்பில் தனித்துவமாக திகழ்கிறார். இளம் வயதிலேயே, 5 ஆயிரம் தேனீ பெட்டிகளை உருவாக்கி ஏராளமான தேனீக்களை வளர்த்து, அதன் மூலம் தேன் அறுவடை நடத்தி வரும் ஜினோவிற்கு, ஆக்கப்பூர்வமான கனவுகளும் உண்டு. அதில், மிக முக்கியமானது, தேனீக்கள் மூலமாக நடக்கும் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாப்பது. கடந்த 15 வருடங்களாக, இந்தப் பணியை சிறப்பாக செய்து வரும் ஜினோவிற்கு, தேசிய தேனீ வாரியம் (இந்தியன் பீ போர்டு) 'இந்தியாவின் தலைசிறந்த தேனீ வளர்ப்பாளர்' என்ற விருதினை வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறது. அந்த உற்சாகத்துடன், கூடுதலாக களப்பணியாற்றி வரும் ஜினோவை, சந்தித்து பேசினோம். அவர் தேனீக்களோடு ஐக்கியமான கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
* தேனீக்களுக்கும், உங்களுக்குமான பந்தம் எப்போது உருவானது?
என்னுடைய அப்பா, தேனீக்களை பெரிதும் நேசித்தவர். இப்போது தேனீ வளர்ப்பும், தேன் சம்பந்தப்பட்ட தொழில்களும் பிரபலமாக இருக்கின்றன. ஆனால் என்னுடைய தந்தை, அவரது இளம் வயதில் இருந்தே அதை வெற்றிகரமாக முன்னெடுத்தவர். தேனீக்களை கையாளும் விதம், வளர்ப்பு முறைகள், தேன் சேகரிப்பு முறைகள், சுழற்சி முறையில் இடங்களை தேர்வு செய்து தேன் கூடு அமைக்கும் முறை... போன்ற வற்றில் அனுபவம் மிக்கவர். அதனால், எனக்கும் தேனீக்களுக்கும் இடையே நீண்ட நெடிய பந்தம் உண்டு. சிறுவயதில் இருந்தே தேனீக்களிடம் கொட்டு வாங்கி, அவற்றோடு விளையாடி, அவற்றை வளர்த்து பழகி இருக்கிறேன்.
* தேனீக்களோடு, ஐக்கியமானது எப்போது?
கன்னியாகுமரி , தேனீ வளர்ப்பிற்கு ஏற்ற பகுதி. பலவிதமான காடுகள் இருப்பதால், மற்ற இடங்களை விட தேனீ வளர்ப்பதற்கு ஏதுவான சூழல் இங்கே நிலவுகிறது. அதனால் பட்டப்படிப்பிற்கு பிறகான வாழ்க்கையை, தேனீக்களோடும், நாகர்கோவில் பகுதியிலும் வாழ ஆசைப்பட்டு, தேனீக்களோடு ஐக்கியமானேன்.
* உங்களது பராமரிப்பில் எத்தனை தேனீ பெட்டிகள் இருக்கின்றன?
தேனீ பெட்டிகளின் கணக்கு, 5 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இந்திய தேனீ, இத்தாலிய தேனீ மற்றும் கொசுத்தேனீ ஆகிய மூன்று வகையான, மூன்று சுவையான தேனீக்களை வளர்க்கிறேன். இவற்றை மொத்தமாக ஒரே இடத்தில் வைப்பதில்லை. சீசனுக்கு ஏற்ப தமிழ்நாடு, கேரளா பகுதிகளுக்கு மாற்றி, தேன் அறுவடை செய்கிறோம். உதாரணத்திற்கு, ஜனவரி முதல் மார்ச் வரையிலும் கேரளாவில் ரப்பர் தோட்ட சீசன் அமோகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில், தேனீ பெட்டிகளை கேரளாவிற்கு மாற்றி விடுவோம். சீசன் முடிந்ததும், தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து அதை வெவ்வேறு பகுதிகளிலும், வெவ்வேறு தோட்டங்களிலும் வைத்து பராமரிப்போம்.
* இந்தியாவின் தலைசிறந்த தேனீ வளர்ப்பாளர் என்ற விருது வென்றிருக்கிறீர்கள். அதுபற்றி கூறுங்கள்?
தேசிய தேனீ வாரியம், மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறது. தேனீக்களை அதிகமாக வளர்த்து, மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தி இயற்கை சூழலை பாதுகாப்பது இதன் முக்கிய நோக்கம். அதற்காக, தேனீ வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகள், தொழில் மானியம், விற்பனை சந்தை... ஆகியவற்றை வளப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறது. மேலும் வருடந்தோறும், தேனீ வளர்ப்பில் அதிக பங்களிப்பு கொடுப்பவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது.
* தேனீ வளர்க்க பயிற்சி கொடுக்கிறீர்களா?
ஆம்...! கடந்த 10 வருடங்களாகவே, தேனீ வளர்க்க இலவசமாக கற்றுக்கொடுக்கிறேன். நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த பள்ளிக்குழந்தைகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை மாணவ-மாணவிகள் என வருடந்தோறும், நிறைய நபர்களுக்கு இலவச வகுப்பெடுத்து, தேனீ வளர்ப்பை அதிகப் படுத்துகிறேன்.
* தேனீ வளர்ப்பை பொதுமக்களும் வரவேற்கிறார்களா?
நிச்சயமாக, தேனீக்களை வளர்ப்பதினால், தேன் அறுவடை மூலமாக வளர்ப்பவர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது. ஒரு தேனீ பெட்டியில் மட்டும், ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் தேன் எடுக்க முடியும். ரப்பர் தோட்டங்களில் தேன் சீசனின் போது வாரம் ஒரு முறை தேன் கிடைக்கும். அதுவே, தேனீ பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தேன் அறுவடையும் அதிகரிக்கும். இது லாபகரமான முயற்சிதானே..? பிறகு பொதுமக்கள் எப்படி ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள். மிக முக்கியமாக, தேனீக்களுக்கு நீங்கள் தீவனம் போட வேண்டியதே இல்லை. அவை தானாகவே உணவு தேடி, உயிர் வாழ்ந்துவிடும். ஒருமுறை மட்டும், ரூ.1600 செலவில், நீங்கள் தேனீ பெட்டி வாங்கி வைத்தால் போதும் (தேனீக்களும் சேர்த்து), அதிலிருந்து மாதந்தோறும் வருமானம் ஈட்ட முடியும். அந்தவகையில், இது 'ஒன் டைம் இன்வெஸ்ட்மெண்ட்' தொழில் முயற்சி.
* என்னென்ன பயிற்சிகள் கொடுக்கிறீர்கள்?
பெரும்பாலும் சனிக்கிழமைகளில்தான் இலவச பயிற்சி நடைபெறும். அன்று தேனீக்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, தேனீ பெட்டி அமைக்கும் முறைகள், அதை பராமரிக்கும் முறைகள், ராணித் தேனீயை கண்டறிவது, கையாள்வது, தேனீக்களோடு பழகுவது போன்ற பயிற்சிகளை வழங்குகிறேன்.
* எங்கெல்லாம் தேனீ வளர்க்கலாம்?
தென்னை மர தோட்டம், முருங்கை மர தோட்டம், எள் தோட்டம், சூரிய காந்தி தோட்டம்... என பூ பூத்து மகரந்த சேர்க்கை நடக்கும், எல்லா தோட்டங்களிலும், எல்லா இடங்களிலும் தேனீக்களை வளர்க்க முடியும்.
தேனீக்களை பெரிய தோட்டத்தில்தான் வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பூச்செடிகள் இருக்கும் சிறு வீட்டுத் தோட்டத்திலும், தேன் பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்கலாம்.
* வீட்டுதோட்டங்களில் தேனீ வளர்க்க முடியுமா? பராமரிப்பு வழிமுறைகளை கூறுங்கள்?
தாராளமாக வளர்க்கலாம். தேனீக்களை வளர்க்க நிழல் அவசியம். நேரடியான சூரிய ஒளியிலிருந்து விலகி, நிழல் இருக்கும் பகுதிகளில் தேனீ பெட்டிகளை அமைக்கலாம். அதேபோல இரவு நேரங்களில், தேனீ பெட்டிகள் மீது வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை தவிர, 7 நாட்களுக்கு ஒருமுறை, தேனீ பெட்டியைத் திறந்து, தேன் அடை மற்றும் தேனீக்களின் நிலவரத்தை கண்காணிப்பது அவசியம். ஏனெனில் தேன் அடையில் புழுக்கள் இருந்தால், அதை சுத்தப்படுத்த வேண்டும். அடைகள் திடீரென கருப்பாக மாறினாலும், அவை நோய் பாதிப்பிற்கு உள்ளாவதாக அர்த்தம். அதையும், ஆரம்பத்திலேயே கண்காணித்து அகற்றிவிட வேண்டும். இறுதியாக தேனீ பெட்டியில், அடிப்பலகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், அது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
* தேன் நிறமும், சுவையும் மாறுபடுமா?
ஆம்..! தோட்டங்களுக்கு ஏற்ப தேனின் நிறமும், அதன் சுவையும் மாறுபடும். முருங்கை தோட்டத்திலிருந்து எடுக்கப்படும் தேன், வெளிர் நிறத்தில், அடர்த்தியாக இருக்கும். மாம்பழ தோட்டத்தில் வளரும் தேனீக்கள், புளிப்பு-இனிப்பு சுவை கலந்த தேனை கொடுக்கும். புளியந்தோப்புகளில் அமைக்கப்பட்ட தேனீ பெட்டிகளிலிருந்து எடுக்கப்படும் தேன், அதிக புளிப்புச் சுவையுடன் இருக்கும். இப்படி பூக்களுக்கு ஏற்ப, தேன் சுவையும், நிறமும் மாறுபடும்.
* தேனீக்களுக்கு உணவாக ஏதும் கொடுக்க வேண்டுமா?
அவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் மழை காலங்களில், தேனீக்கள் உணவு சேகரிக்க வெளியில் செல்லாது. அந்த காலகட்டத்தில் மட்டும், நாம் சர்க்கரை தண்ணீர் கொடுக்கலாம். ஏனெனில், மழைகாலங்களில் அவற்றுக்கு தேன் தான் உணவு. அதை நாம் எடுத்துவிடும்போது, இயற்கை தேனிற்கு பதிலாக, சர்க்கரை தண்ணீரை உணவாக கொடுக்கலாம்.
* உங்களுடைய ஆசை?
முடிந்த வரை எல்லா மக்களுக்கும் தேனீ வளர்ப்பை கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
எதன் அடிப்படையில், விருதுகள் வழங்கப்படும்?
எத்தனை தேனீ பெட்டிகளை வைத்திருக்கிறோம், என்னென்ன பயிற்சிகளை முடித்திருக்கிறோம், எவ்வளவு பேருக்கு தேனீ வளர்ப்பை கற்றுக்கொடுத்திருக்கிறோம், தேனை அடிப்படையாக கொண்ட மதிப்புக் கூட்டு பொருள் உருவாக்கம்... இவற்றையெல்லாம் அடிப்படையாக கொண்டுதான், இந்தியாவின் தலைசிறந்த தேனீ வளர்ப்பாளரை நிர்ணயிக்கிறார்கள். அதன்படியே, எனக்கு விருது கவுரவம் கிடைத்தது.