விமானங்கள் தரை இறங்க வழிகாட்டும் நாசா..!
சாலையின் டிராபிக்குக்கு பயந்து விமானத்தில் ஏறி பறந்தால், அங்கேயும் தரையிறங்க தாமதமானால் என்னதான் செய்வது? என பலரும் வருத்தப்பட்டபோதுதான், அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்த டெக்னாலஜி உதவிக்கு வந்தது.;
சிறிய ரக ஜெட் விமானங்கள் இனி தரையிறங்க ஏர் டிராபிக் கண்ட்ரோலரின் உதவியை நாடாமல் தமக்குள்ளேயே உரையாடி, வரிசையாக 'ரன்'வேயில் சிக்கலின்றி விமானத்தை தரையிறக்கலாம். நாசாவின் இந்த புதிய டெக்னாலஜிக்கு பெடரல் ஏவியேஷன் அட்மினிட் ரேஷன் அனுமதியும் அளித்துள்ளது.
தற்போது, விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள அலுவலர்களோடு தொடர்புகொண்டு இரு விமானங்களுக்கு இடையிலான தொலைவைக் கணித்து, வேகம் குறைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கீழிறங்க தயாராவார்கள். தற்போதைய நாசாவின் தொழில்நுட்பத்தின்படி செயற்கைக்கோளின் வழிகாட்டுதல் மூலம் தானியங்கி கணினிக் குரல் விமானிகளுக்கு பிற விமானங்களைப் பற்றிய 'லைவ்' அப்டேட் கொடுத்து தரையிறங்க உதவுகிறது. இதனால் கட்டுப்பாட்டு அறையின் உதவிக்காக காத்திருக்கும் நேரமும், எரிபொருளும் மிச்சம்.
"நாசா தொழில்நுட்பத்தின்படி வேகமாக விமானங்கள் தரையிறங்கினால் பயணிகளுக்கு காத்திருக்கும் நேரம் மிச்சம்தானே!" என புன்னகையோடு பேசுகிறார் முன்னாள் விமான கட்டுப்பாட்டு அலுவலரான வில்லியம் ஜான்சன்.
எப்படி செயல்படுகிறது?
விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தையும், வேகத்தையும் ஜி.பி.எஸ். சிக்னல்கள் ஆட்டோமேட்டிக்காக கணித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகிறது. செயற்கைக்கோள்களின் தகவல்களைப் பெற்ற கட்டுப்பாட்டு அறைக் கணினிகள், விமானங்களின் தகவல்களிலிருந்து தேவையான தகவல்களைக் கணித்து எரிபொருள் சிக்கன வழித்தடத்தை தேர்ந்தெடுத்து கொடுக்க, அதை பின்பற்றி தாமதமின்றி விரைவாக தரை இறங்குகிறார்கள்.