கொண்டப்பள்ளி பொம்மைகள்..!
கொண்டப்பள்ளி பொம்மைகள் முழுமையாக கைகளால் மட்டுமே செய்யப்படுகிறது. எந்த ரசாயனமும் கலக்காமல் முழுவதும் இயற்கைப் பொருட்களாலேயே உருவாக்கப்படுகிறது.;
நம் நாட்டில் சிந்து சமவெளி நாகரிக காலம்தொட்டே பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹரப்பா, மொஹஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பெரும்பாலான பொருட்கள் பொம்மைகளே! கல், மண், மரம் என்று வரலாற்றில் பல வகையான பொம்மைகள் உள்ளன என்றாலும் கொண்டப்பள்ளி பொம்மைகள் பல வகைகளில் ஸ்பெஷல். காரணம், இவை முழுமையாக கைகளால் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும், எந்த ரசாயனமும் கலக்காமல் முழுவதும் இயற்கைப் பொருட்களாலேயே உருவாக்கப்படுகிறது.
தெல்ல பொனிகி எனும் ஒருவகை மென்மையான மரத்திலிருந்தே இந்த பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. முதலில் இந்த மரத்தை வெட்டி, அதிலுள்ள ஈரப்பதம் நீங்க சூடு காட்டப்படுகிறது. பிறகு நன்கு காய வைக்கப்பட்டு, தேவையான உருவங்களை கைகளால் செதுக்குகின்றனர்.
பொம்மைகளின் பாகங்கள் முதலில் தனித் தனியாக செய்யப்பட்டு பின்பு ஒட்டப்படுகிறது. ஒட்டுவதற்கு, புளியங்கொட்டையில் இருந்து பெறப்படும் ஒரு வகை பசை உபயோகப்படுகிறது. ஒட்டப்பட்ட பொம்மையின் பாகங்களின் மேல் முதலில் வெண்மையான ஒன்றைத் தடவுகிறார்கள். பிறகு பொம்மைகளுக்குத் தேவையான வண்ணங்களை பூசுகிறார்கள். வண்ணங்கள் எல்லாமே செடி, கொடி வகைகளிலிருந்தே பெறப்படுகின்றன. வண்ணம் பூசுவதற்கான தூரிகைக்கு ஆட்டு ரோமங்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில், இஸ்லாமிய கலை வடிவத்தின் அடையாளங்கள், இந்த பொம்மைகளில் வெளிப்பட்டன. ஆனால் இன்று, காலத்திற்கு ஏற்ப மாற்றம் கண்டு, பல வடிவங்கள், பல உருவங்களில் கொண்டப்பள்ளி பொம்மைகள் தயாராகின்றன.
ஆந்திராவில் உள்ள கொண்டப்பள்ளியில் இன்னும் கூட இந்த பொம்மைகளை செய்கிறார்களாம். பிளாஸ்டிக் பொம்மைகளை மட்டுமே அறிந்திருக்கும் நம் குழந்தைகளை அங்கே ஒரு சுற்றுலா கூட்டிட்டுப் போகலாமே!
வண்ணங்கள் எல்லாமே செடி, கொடி வகைகளிலிருந்தே பெறப்படுகின்றன. வண்ணம் பூசுவதற்கான தூரிகைக்கு ஆட்டு ரோமங்கள் பயன்படுத்தப்படுகிறது.
புழுதி கிளப்பும் நடனம், கண் கலங்க வைக்கும் கார மசாலா சாப்பாடு போல ஆந்திராவிற்கு என இன்னொரு அடையாளமும் இருக்கிறது. அதுதான் கொண்டப்பள்ளி பொம்மைகள்.